இந்தியாவின் மிக உயரிய குடிமைப் பணிகளாகக் கருதப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் ஐ.எஃப்.எஸ் ஆகிய துறைகளில் நாடு முழுவதும் 2,800-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு மாநிலங்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

கேரளாவைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவையில் இதுதொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். அதில் மேலும் கூறப்பட்டு உள்ளதாவது:

காலியிடங்களின் முழு விவரம்

மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, நாடு முழுவதும் அனுமதிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளின் மொத்த எண்ணிக்கை 6,858 ஆகும். ஆனால், தற்போது 5,457 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் 1,401 ஐஏஎஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 20.4 சதவீதமாகும். அதாவது, ஐந்தில் ஒரு ஐஏஎஸ் பணியிடம் காலியாக உள்ளது.

Continues below advertisement

இதேபோல, இந்தியக் காவல் பணியான ஐபிஎஸ் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 4,984 இடங்களில், 4,100 அதிகாரிகள் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் 884 இடங்கள் (17.7%) காலியாக உள்ளன. இந்திய வனப் பணியான ஐஎஃப்எஸ் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3,193 இடங்களில், 549 இடங்கள் (17.2%) நிரப்பப்படாமல் உள்ளன.

மாநில வாரியான நிலவரம்

மாநில வாரியாகப் பார்க்கும்போது, அருணாச்சல பிரதேசம், கோவா, மிசோரம் மற்றும் டெல்லி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கிய 'அக்முட்' (AGMUT) கேடரில்தான் அதிகபட்சமாக 267 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு அடுத்தபடியாக, உத்தரப் பிரதேசத்தில் 215 முக்கிய பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்தத் தகவல்கள் மாநிலங்களுக்கிடையே அதிகாரிகளின் நியமனத்தில் உள்ள சமச்சீரற்ற தன்மையை வெளிப்படுத்துகின்றன.

என்ன காரணங்கள்?

ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் சிவில் சர்வீஸ் தேர்வுகள் நடத்தப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டாலும், பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இதற்கு ஓய்வு பெறுதல் (Retirement), பதவி உயர்வு, பணி விலகல் மற்றும் காலத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன.

எந்தெந்த துறைகளில் காலி இடங்கள்?

சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு போன்ற முக்கியத் துறைகளில் இது போன்ற உயரிய பதவிகள் காலியாக இருப்பது நிர்வாகத் திறனை பாதிக்கும் என்று கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குறையைச் சரிசெய்ய, ஆள்சேர்ப்பு செயல்முறைகளை மத்திய அரசு அவ்வப்போது ஆய்வு செய்து வருவதாக அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.