பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி அக்டோபர் 16 கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டமும் நவம்பர் 18 ஒரு நாள் அடையாள வேளை நிறுத்த போராட்டத்திலும் ஈடுபட உள்ளதாக ஜாக்டா ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அடையாள வேளை நிறுத்த போராட்டத்திற்குப் பின்னரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு அறிவிக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் ஜாக்டோ ஜியோ எச்சரிக்கை விடுத்துள்ளது.
பழைய ஓய்வூதியத்தை நிறைவேற்ற வேண்டும் என்பது தொடர்பான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சென்னை சூளைமேட்டில் நடைபெற்றது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், கடந்த ஆட்சியின்போது ஜாக்டோ ஜியோ பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பல கட்ட போராட்டங்களை கண்டது அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதல்வர் எங்களை சந்தித்து பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆட்சிக்கு வந்தது நிறைவேற்றிக் கொடுப்பதாக வாக்குறுதி அளித்தார்.
அதனை நம்பி நாங்கள் அனைவரும் அவருக்கு ஆதரவு அளித்தோம் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகும் ஜாக்டோ ஜியோ சார்பில் நடைபெற்ற வாழ்வாதார மாநாட்டில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், உங்களுக்கு வழங்கிய கோரிக்கையை மறக்கவில்லை. நிதிநிலை சரியான உடன் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதியும் அளித்தார். இருந்து கடந்த நாலரை ஆண்டாக எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை.
ஆசிரியர்களிடையே ஏமாற்றம்
இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விடுப்புத் தொகை மட்டும் வழங்குவதாக அறிவித்தது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே ஏமாற்றத்தை அளித்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு குழு அமைப்பதாக முதல்வர் தெரிவித்தார். அந்த குழு செப்டம்பர் 30ஆம் தேதிக்கு உள்ளாக குழுவின் அறிக்கையைப் பெற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்குவதாக தெரிவித்தார். ஆனால் அவ்வாறு செய்யாமல் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்து, கால அவகாசம் அளித்திருப்பது அரசு ஊழியர்களிடையே ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
இதன் காரணமாக எங்களது கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என எட்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்தந்த வட்டார தலைமை அலுவலகம் முன்பாக கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
நவம்பர் 18 ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம்
அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகம் என ஜாக்டோ ஜியோ பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளோம். நவம்பர் 18 ஆம் தேதி 5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதற்குப் பின்னரும் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்’’ என்று தெரிவித்தார்.