2024ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலைத் தேர்வு விடைத்தாள் குறிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு கட்- ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.


இளங்கலை நீட் தேர்வுக்கு சுமார் 23.8 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.  இத்தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 557 நகரங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த 14 நகரங்களிலும் தேர்வு நடைபெறுவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மே 5ஆம் தேதி நீட் தேர்வு


இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெற்றது. இத்தேர்வானது தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் தேர்வு நடைபெற்ற நிலையில், முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ விரைவில் வெளியாக உள்ளது. மாணவர்கள், exams.nta.ac.in என்ற இணையதளத்துக்குச் சென்று, தற்காலிக விடைக் குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


விடைக் குறிப்புகள் வெளியான உடன், அதில் ஆட்சேபம் ஏதும் இருந்தால், அதை மாணவர்கள் உரிய ஆதாரங்களோடு ஆட்சேபனை செய்யலாம். எனினும் ஒவ்வொரு பதிலுக்கும் 200 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அனைத்து ஆட்சேபனைகளும் பெறப்பட்ட பிறகு, தேசியத் தேர்வுகள் முகமை அவற்றைப் பரிசீலித்து, இறுதி விடைக் குறிப்புகளைத் தயார் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு கட்- ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் மருத்துவப் படிப்புகளுக்கான போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


விடைக் குறிப்பைப் பெறுவது எப்படி?



  • NEET UG 2024-க்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

  • முகப்புப் பக்கத்தில் தோன்றும் 'NEET UG 2024 provisional answer key' என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • புதிய பக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

  • அதில், உங்களின் லாகின் விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.

  • நீட் இளநிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகி இருக்கும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://neet.ntaonline.in/