டெல்லி தேசியத் தேர்வுகள் முகமை அலுவலகம் முன்பு இருந்த பெட்டிகளில் என்ன இருந்தது என்பது குறித்து அந்த முகமை விளக்கம் அளித்துள்ளது.


இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘’பெட்டிகளில் எந்த ஆவணமோ, பொருட்களோ இல்லை. பெட்டிகள் இருந்த இடத்தில் போதிய பாதுகாப்பு இருந்தது’’ என என்டிஏ விளக்கம் அளித்துள்ளது.


நாடு முழுவதும் பலர் கைது


நீட் தேர்வு மோசடி விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிஹார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது, நீட் முறைகேடு விவகாரத்தை சிபிஐ விசாரித்து வருகிறது. உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 


இந்த சர்ச்சை அடங்குவதற்குள் உதவி பேராசியர்கள் பணிக்காக நடைபெற்ற நெட் தேர்விலும் வெளிப்படை தன்மை இல்லை என தகவல் வந்ததால் அந்த தேர்வும் ரத்து செய்வதாக தேசிய கல்வி அமைச்சகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தேர்வு முறைகேடு தொடர்பான சட்டமும் அமலுக்கு கொண்டு வரப்பட்டது.


நெட் தேர்வுக்கான புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. முறைகேடு புகார்களை தொடர்ந்து தலைவராக செயல்பட்டு வந்த சுபோத் குமார் அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு, பிரதீப் சிங் கரோலா நியமனம் செய்யப்பட்டார். 


கேட்பாரற்றுக் கிடந்த பெட்டிகள்


இந்த நிலையில், டெல்லி தேசியத் தேர்வுகள் முகமை அலுவலகம் முன்பு ஏராளமான பெட்டிகள் கிடந்தன. அவற்றில் க்யூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வு விடைத்தாள்கள் இருந்ததாக சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்துப் பெற்றோர்களும் மாணவர்களும் கவலை தெரிவித்தனர். இந்த நிலையில் பெட்டிகளில் என்ன இருந்தது என்பது குறித்து அந்த முகமை விளக்கம் அளித்துள்ளது.






இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், ‘’பெட்டிகளில் ஆபத்தை விளைவிக்கும் வகையில் எந்த ஆவணமோ, பொருட்களோ இல்லை. பெட்டிகள் இருந்த இடத்தில் போதிய பாதுகாப்பு இருந்தது’’ என என்டிஏ விளக்கம் அளித்துள்ளது.