ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது- ராமதாஸ்.

Continues below advertisement

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’2013-17 ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 2022- 23-ஆம் கல்வி ஆண்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 5,000 பேர் தற்காலிக ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தனர். சென்னை உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின் படியும், முதன்மைக் கல்வி அலுவலர்களின் செயல் முறையின் படியும் மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்து மாதிரி வகுப்புகள் எடுத்து இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பணியில் சேர்ந்த காலகட்டம் கொரோனா காலகட்டத்தின் இறுதி காலம் என்பதால் அப்போது நிலவிய கடினமான நிதி நெருக்கடியின் காரணமாக 5 மாதங்கள் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் இல்லாமல் கடினமான சூழ்நிலையில் பணியாற்றியுள்ளனர். பணியில் சேர்ந்த நாள் முதல் இன்றைய நாள் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு 12,000 ரூபாய் ஊதியமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15,000 ரூபாய் ஊதியமும் மதிப்பூதியம் என தரப்படுகிறது.

Continues below advertisement

எந்த விடுப்பும் கிடையாது இவர்கள் கற்றல் பணியை மட்டும் மேற்கொள்ளாமல் அரசின் நலத்திட்டங்களை மாணவர்களிடம் கொண்டு போய் சேர்ப்பது, அரசுக்கு நற்பெயர் அளிக்கும் வகையில் மாணவர்களை பண்புள்ளவர்களாகவும், நல்ல மதிப்பெண் எடுப்பவர்களாகவும் உருவாக்குவது போன்ற பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். மேலும் அனைத்து பணியிடை பயிற்சிகளும் பெற்று கூடுதல் தகுதி பெற்ற ஆசிரியர்களாகவும் உருவெடுத்துள்ளனர். அதேசமயம் இவர்களுக்கு தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்புகள் அளிக்கப்படுவதில்லை. இதனால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டால் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றியாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர்.

ஆனாலும் இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் முறையே மாதாமாதம் வழங்கப்படுவதில்லை. 5 மாதம், 3 மாதம், 2 மாதம் என காலம் கடந்துதான் வழங்கப்படுகிறது. இந்த குறைவான சம்பளத்தை கூட மாதாமாதம் முறையாக வழங்காமல் காலம் தாழ்த்தி வழங்குவதால் இந்த ஊதியத்தை மட்டுமே நம்பியுள்ள இவர்களது குடும்பத்தினர் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர்.  

எந்த சட்ட சிக்கலும் இல்லை

ஆசிரியர் பணிக்கு தகுதித் தேர்வு கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணியாற்றி வரும் இவர்களைப் பணி நிரந்தரம் செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இருக்காது.

எனவே, கல்வித்துறை மூலம் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டு இடைநிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் 4 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அல்லது அரசுக்கு நிதி நெருக்கடி இருக்குமாயின் பதிவு மூப்பு அடிப்படையில், ஊதியத்தை உயர்த்தி தொகுதிப்பூதியமாக வழங்கி  இவர்களின் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

கோரிக்கைகளை நிறைவேற்றுக அதுபோலவே ஓராண்டு முதல் நான்கு ஆண்டு வரை தற்காலிக ஆசிரியராக பணியாற்றி பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கும் நிரந்தரப் பணி வாய்ப்பு வழங்க வேண்டும். மேலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு கொடுத்ததைப் போல இவர்களுக்கும் மே மாத ஊதியம் 15,000 ரூபாய் வழங்க வேண்டும். சம்பளத்துடன் கூடிய தற்செயல் மற்றும் மருத்துவ விடுப்புகள் வழங்கப்பட வேண்டும்’’ என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.