பள்ளி மாணவர்களுக்கு 4 ஆண்டுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்க வழிவகை செய்யும் என்எம்எம்எஸ் தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இதைப் பார்ப்பது எப்படி என்று காணலாம். 


கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற தேர்வில் 6,695 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1681543967.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


நாடு முழுவதும் ஏழை மாணவர்களின் மேல்நிலைக் கல்வி தடைபட்டு விடக் கூடாது என்ற நோக்கத்தில் மத்தியக் கல்வித் துறை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு நடத்தப்பட்டு, 1 லட்சம் பேருக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் 6,695 மாணவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.


தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு


இதற்குத் தகுதிவாய்ந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்ய தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு (என்எம்எம்எஸ்- National Means Cum Merit Scholarship Scheme) ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்புப் படிக்கும் மாணவ, மாணவிகள் இத்தேர்வை எழுதலாம். இதில் தேர்ச்சி பெறுவோருக்கு 9-ம் வகுப்பில் இருந்து 12ஆம் வகுப்புப் படிக்கும் வரை மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 


எனினும் 10ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே, அடுத்த ஆண்டுக்கு உதவித் தொகை வழங்கப்படும். எஸ்சி/ எஸ்டி மாணவர்களுக்கு 5 சதவீதத் தளர்வு உண்டு.


2022- 2023ஆம்‌ கல்வியாண்டிற்கான தமிழ்நாடு அரசின்‌ அங்கீகாரம்‌ பெற்ற அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பயிலும்‌ எட்டாம்‌ வகுப்பு மாணவர்கள்‌ தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்விற்கு 26.12.2022 முதல்‌ 20.01.2023 விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.மாணவர்களின் கோரிக்கையை அடுத்து, 03.02.2023 முதல்‌ 07.02.2023 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டது.


இதற்கான தேர்வுக்‌ கட்டணம்‌ ரூ.50/- வீதம்‌ DGE PORTAL-ல் Online-ல் அனைத்து விண்ணப்பங்களும்‌ பதிவேற்றம்‌ செய்த பிறகு தேர்வுக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்தினர். 


இவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்வு நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் இன்று (ஏப்ரல் 15) வெளியாகி உள்ளன.  இதில் தமிழ்நாட்டில் இருந்து 6,695 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


தேர்வர்கள் https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1681543967.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.


தேசிய வருவாய் வழி மற்றும்‌ திறன்‌ படிப்புதவித்‌ திட்டத்‌ தேர்வு உதவித் தொகை தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/public/schemeGuidelines/NMMSSGuidelines.pdfஎன்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.