அரசு பள்ளி மாணவர்களின் பொது அறிவு மற்றும் ஆங்கில மொழி திறனை வளர்க்கும் வகையில் ஆங்கில பத்திரிகையினை 10 பள்ளிகளில் 10 பிரதிகளை விலையின்றி வழங்கும் திட்டத்தினை நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு நெல்லை மீனாட்சிபுரம் மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஆங்கில பத்திரிகை பிரதிகளை வழங்கி மாணவிகள் மத்தியில் உரை நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர், தற்போது அனைத்து தகவல்களும் மொபைல் போன் மூலம் வாட்ஸ் அப் மூலம் கிடைத்து வருகிறது. 16 முதல் 18 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கு பல தகவல்கள் பல முனைகளில் இருந்தும் வந்து கொண்டிருக்கிறது. பயணங்களில் மூலம் பார்க்கப்படும் சுவரொட்டிகள் பேனர்கள் அதேபோல வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பல தகவல்கள் கிடைக்கப்பெறுகிறது. இதன்மூலம் கிடைக்கப்படும் தகவல்களில் எந்த தகவல் உண்மை, எந்த தகவல் உண்மை இல்லை என்பதை அறிவது சிரமமான விஷயம். ஆனால் தரமான நாளிதழ்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் நம்பகமானது.
நாளிதழ்களில் வரும் தகவல்களை மட்டுமே உண்மை என்பதை அறிந்து படிக்கக்கூடிய தகவல்களாக இருக்கும். மொழி என்பது மிக முக்கியமான விஷயம். ஆங்கிலம் என்பது சர்வதேச மொழி. நாளிதழ்களில் வரும் தகவல்களை குறிப்பெடுத்து தொடர்ந்து எழுதி வந்தால் எழுத்து பழக்கத்தை மேம்படுத்த முடியும். நாளிதழ்கள் படிக்கும்போது உலகத்தில் இருக்கும் அத்தனை தகவல்களும் தினமும் கிடைக்கும். அரசு பள்ளிகளில் இருக்கும் மாணவ, மாணவிகளின் ஆங்கில திறன் மற்றும் பொது அறிவு மேம்படுத்தும் வகையில் இந்த திட்டம் நெல்லை மாவட்டத்தில் 10 அரசு பள்ளிகளில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் முயற்சி எடுத்து மாணவ, மாணவிகள் மத்தியில் கொண்டு சென்றால் இந்த திட்டம் முன்னோடி திட்டமாக செயல்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்