2025ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூன் 14) வெளியாகும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்து உள்ளது. 

மருத்துவ இளநிலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வான நீட்,  மே 4ஆம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. நாடு முழுவதும் 557 நகரங்களில் 4,750 தேர்வு மையங்களிலும் வெளிநாட்டில் 14 மையங்களிலும் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

மறு தேர்வு கோரி தொடரப்பட்ட வழக்குகள்

முன்னதாக சத்தீஸ்கர் மாநிலத்தில் நீட் மறுதேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதேபோல தமிழ்நாட்டிலும் ஆவடி உள்ளிட்ட தேர்வு மையங்களில் மின் தடை ஏற்பட்டதால், நீட் மறு தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று கோரி மாணவர்கள் வழக்குத் தொடர்ந்திருந்தனர். இந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. 

சம்பந்தப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது. தேர்வு மையத்தின் சிசிடிவி காட்சிகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. தொடர்ந்து ஜூன் 16ஆம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது. அதுவரை மறு தேர்வு நடத்துமாறு உத்தரவிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள்

இந்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை வட்டாரத்தில் கூறும்போது, திட்டமிட்டபடி ஜூன் 14ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • நீட் தேர்வு முடிவுகளை வெளியிடும் அதிகாரப்பூர்வ வலைத்தளமான neet.nta.nic.in-ஐ க்ளிக் செய்யவும்.
  • அதில் NEET 2025 scorecard download என்ற இணைப்பைக் கிளிக் செய்யவும்.
  • நீட் தேர்வு விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடவும்.
  • அதில் மேலும் கேட்கப்பட்டுள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
  • உடனே, தேர்வு முடிவு அடங்கிய பிடிஎஃப் கோப்பு திறக்கும்.
  • உங்கள் பெயர் மற்றும் மதிப்பெண்களைச் சரிபார்க்கவும்.
  • எதிர்கால குறிப்புக்காக கோப்பைச் சேமிக்கவும்.

கடந்த 2024ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், ஜூன் 4ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.