நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாணவர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாளை (ஜூலை 19) மாலை 5 மணிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை நேரம் கோரியது. இதை அடுத்து சனிக்கிழமை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையை ஜூலை 22ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹசாரிபக் மற்றும் பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடு
நீதிமன்ற விசாரணையின்போது, ’’ஹசாரிபக் மற்றும் பாட்னாவில் நீட் தேர்வு முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 80 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஹசாரிபக்கில் 5 தேர்வு மையங்கள் உள்ள நிலையில், ஒயாசிஸ் பள்ளி என்னும் ஒரே ஒரு தேர்வு மையத்தில் முறைகேடு நடந்துள்ளது. அங்கு 2,736 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்’’ என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்தது.
ஜூலை 24ஆம் தேதி கலந்தாய்வு
ஜூலை 22ஆம் தேதி மதியத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீட் தேர்வு கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். எனினும் மருத்துவக் கலந்தாய்வு 2 - 3 மாதங்கள் நடைபெறும் என்பதால், ஜூலை 24ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்தது.