நீட் தேர்வை எழுத வேண்டும் எனில், பூணூலை அறுக்க வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று சொன்ன விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலம், கலபுர்கியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு மே 4ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுத இந்தியா முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்காக  5,453 தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு இருந்தன. இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனனர்.

ஏராளமான கெடுபிடிகள்

இந்த நிலையில் தேர்வெழுத வந்த மாணவ – மாணவிகளிடம் ஏராளமான கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டன. அதிக பட்டன்களைக் கொண்ட மாணவியின் ஆடையில் பட்டன்களை அறுத்து எறிந்தது, தாலி, மூக்குத்தி ஆகியவற்றைக் கழற்றச் சொன்னது என கொடூரங்கள் நிகழ்ந்தன. இந்த நிலையில், கர்நாடக மாநிலம், கலபுர்கியில் உள்ள புனித மரியன்னை பள்ளியில் நீட் தேர்வு எழுத, ஸ்ரீபாத் படேல் என்ற மாணவர் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அப்போது அவர் அணிந்து இருந்த பூணூலை அறுக்க வேண்டும் அல்லது கழற்ற வேண்டும் என்று அங்கிருந்த தேர்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சர்ச்சைகளுக்கு வித்திட்டுள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து 2 அதிகாரிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

இருவர் கைது

இதுகுறித்து கலபுர்கி சிட்டி காவல் ஆணையர் ஷரணப்பா கூறூம்போது, ’’பூணூல் விவகாரத்தில், தனியார் தேர்வு மையத்தில் பணியாற்றிய இருவர் மீது தேர்வர் புகார் அளித்துள்ளார். நாங்கள் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளோம். ஊழியர்கள் விசாரிக்கப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டனர், பின்னர் அது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்பதால் காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மற்றவர்களின் பங்கு ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது, மேலும் ஊழியர்களுக்கு அவர்களின் கடமைகள் குறித்து முறையாக விளக்கப்பட்டது.

தேர்வுப் பணிக்காக நியமனம்

வழக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆண்களும் ஒரு முகமைக்காகப் பணியாற்றி வருகின்றனர். அவர்களை தேசியத் தேர்வுகள் முகமை தேர்வுப் பணிக்காக நியமித்துள்ளது’’ என்று கலபுர்கி சிட்டி காவல் ஆணையர் ஷரணப்பா கூறினார்.

ஏற்கெனவே ஏப்ரல் 16ஆம் தேதி பொறியியல் மற்றும் பிற தொழில் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்ட போதும், பிராமண மாணவர்களின் பூணூல் அகற்றப்பட்ட விவகாரம், பெரும் சர்ச்சைக்கு ஆளானது குறிப்பிடத்தக்கது.