நீட் இளநிலை மருத்துவக் கலந்தாய்வுக்காக கல்லூரிகளில் ஒதுக்கப்படும் இடங்களின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.


உச்ச நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணையில், ஜூலை 22ஆம் தேதி மதியத்துக்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது நீட் தேர்வு கலந்தாய்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர்.


கலந்தாய்வைத் தொடங்க மத்திய அரசு மறுப்பு


எனினும் மருத்துவக் கலந்தாய்வு 2 - 3 மாதங்கள் நடைபெறும் என்பதால், ஜூலை 24ஆம் தேதி கலந்தாய்வு தொடங்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருந்தது. ஏற்கெனவே ஜூன் 21ஆம் தேதி, கலந்தாய்வைத் தள்ளி வைக்குமாறு உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.


இதனால் ஜூலை 24ஆம் தேதி அன்று நீட் தேர்வு கலந்தாய்வு தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலில், மருத்துவக் கலந்தாய்வு குழு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான 15 சதவீத இடங்களுக்குக் கலந்தாய்வை நடத்தும். மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மாநில அரசே கலந்தாய்வுகளை நடத்தும்.


ஜூலை 20ஆம் தேதிக்குள் போர்ட்டலில் பதிவிட வேண்டும்


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான நீட் இளநிலைக் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் கல்வி நிறுவனங்கள் தங்களின் இடங்களை ஜூலை 20ஆம் தேதிக்குள் போர்ட்டலில் பதிவிட வேண்டும் என்று மத்தியக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இடங்களின் பகிர்வு உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட முடியும் என்றும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.


சனிக்கிழமை மதியத்துக்குள் நீட் தேர்வு முடிவுகள்


நீட் தேர்வு முடிவுகளை நகரம், தேர்வு மையங்கள் வாரியாகத் தனித்தனியாக சனிக்கிழமை மதியத்துக்குள் மணிக்குள் வெளியிட வேண்டும் என்று தேசியத் தேர்வுகள் முகமைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாணவர்களின் விவரங்களை வெளியிடத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்கு விசாரணை ஜூலை 22ஆம் தேதி நடைபெற உள்ளது.