தமிழகத்தில் காலியாக உள்ள பொது மருத்துவத்துக்கான இடங்களுக்கு மாநிலக் கலந்தாய்வு இன்று (நவ.7) காலை 10 மணிக்குத் தொடங்கி உள்ளது. நீட் தேர்வில் 720 முதல் 107 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.  


தமிழகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்காக மொத்தம் 11 ஆயிரம் இடங்கள் உள்ள நிலையில், இதில் 15 சதவீதம் அதாவது 1650-க்கும் மேற்பட்ட இடங்கள் மத்திய அரசின் வசம் உள்ளன. மத்திய, மாநில அரசுகள் தனித்தனியாகக் கலந்தாய்வை நடத்தி வரும் நிலையில், இன்னும் நிரப்பப்படாமல் 86 இடங்கள் உள்ளன. இதை வீணாமல் தடுக்கும் வகையில், இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு நடைபெறும் என்று மாநில அரசு அறிவித்தது. 


தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற அரசு மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த  16 இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மத்தியக் கலந்தாய்வின் முடிவில் காலியாக இருந்தன. மேலும், மதுரையில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 3 இடங்களும், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 இடங்களும், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 17 இடங்களும் (மேலாண்மை ஒதுக்கீடு) காலியாக உள்ளன. ஆக மொத்தம் 86 இடங்கள் மருத்துவ இளநிலைப் பட்டப்படிப்பில் காலியாக உள்ளன. 


மத்திய அரசு அனுமதி


இந்த இடங்களை மாநில அரசே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று தமிழக சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் அனுமதி அளித்திருந்தார். இதையடுத்து அக்டோபர் 31 முதல் மத்தியக் கலந்தாய்வு நடத்தப்பட்டது. மத்திய அரசு அனுமதி அளித்ததன் அடிப்படையில், கலந்தாய்வை மாநில அரசே நடத்துகிறது. இதன்படி மத்திய இடங்களுக்கான கலந்தாய்வு அக்.31 தொடங்கி இன்று (நவம்பர் 7ஆம் தேதி) வரை நடைபெற உள்ளது. 


அதேபோல மாநில இடங்களுக்கான கலந்தாய்வு இன்று (நவம்பர் 7ஆம் தேதி) காலை 10 மணிக்குத் தொடங்கியது. இந்த கலந்தாய்வு நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீட் தேர்வில் 720 முதல் 107 மதிப்பெண்கள் வரை பெற்றவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கலாம். இவர்கள் நவம்பர் 9ஆம் தேதி மாலை 3 மணி வரை தங்களுக்கான இடத்தை உறுதி செய்யலாம். இவர்களுக்கு நவம்பர் 10ஆம் தேதி இடம் ஒதுக்கப்படும். இவர்கள் நவம்பர் 15ஆம் தேதிமாலை 3 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும். 


மருத்துவ சுகாதார இயக்குநரகம் வெளியிட்ட நடப்பு காலி இடங்களைக் காண: https://tnmedicalselection.net/news/06112023051050.pdf


கூடுதல் தகவல்களுக்கு: www.tnmedicalselection.orgwww.tnhealth.tn.gov.in


தொலைபேசி எண்கள்: 044 – 28361674 / 044 – 28363822 / 044 - 28364822 / 044 – 28365822 / 044 – 28366822 


முன்னதாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும் மாநில அரசால் நிரப்பப்பட்டன. தொடர்ந்து காலி இடங்களுக்கும் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.