இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தங்களை இன்று (மார்ச் 12)  முதல் மேற்கொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை திறந்துள்ளது.

Continues below advertisement

ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது ஏற்பட்ட தவறுகளைச் சரிசெய்ய மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இறுதி வாய்ப்பு, மார்ச் 14-ம் தேதி நள்ளிரவு 11:50 மணி வரை மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், ஆயுஷ் மற்றும் இதர மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட்தேர்வு வரும் மே 3, 2026 அன்று நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மார்ச் 11 அன்று நிறைவடைந்தது.

Continues below advertisement

லட்சக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், சிறு தவறுகளால் அத்தகைய விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படக் கூடாது என்பதற்காகவே இந்த அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

திருத்தம்செய்வது எப்படி?

மாணவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.ntaonline.in அல்லது exams.nta.ac.in/NEET என்ற தளத்திற்குச் சென்று, தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் கடவுச்சொல்லைப் (Password) பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். பின்னர், விண்ணப்பத்தைத் திருத்துவதற்கான பிரத்யேக இணைப்பைக் கிளிக் செய்து மாற்றங்களைச் செய்யலாம்.

என்னென்னமாற்றலாம்? எவற்றைமாற்றமுடியாது?

மாணவர்கள்,

தாங்கள் தேர்வு எழுத விரும்பும் நகரங்களின் முன்னுரிமை,

இடஒதுக்கீட்டுப் பிரிவு,

கேள்வித்தாள் மொழி,

பதிவேற்றம் செய்யப்பட்ட புகைப்படம்,

கையொப்பம் போன்ற முக்கிய ஆவணங்களில் உள்ள பிழைகளைத் திருத்திக் கொள்ள முடியும். இடஒதுக்கீட்டுப் பிரிவை மாற்றும்போது அதற்கான கூடுதல் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்.

எதை மாற்ற முடியாது?

அதேவேளையில், விண்ணப்பத்தின் போது கொடுக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்ற இயலாது.

இது மாணவர்களுக்கு வழங்கப்படும் ஒருமுறை வாய்ப்பு என்பதால் திருத்தங்களைச் செய்யும்போது ஒவ்வொரு விவரத்தையும் மிகக் கவனமாக ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துச் சமர்ப்பிக்க வேண்டும்.

மாற்றங்களைச் செய்து முடித்த பிறகு, திருத்தப்பட்ட புதிய உறுதிப்படுத்தல் பக்கத்தை தரவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்வது, பிற்காலத்தில் அட்மிட் கார்டு பெறுவதற்கும் கலந்தாய்வுக்கும் பெரிதும் உதவும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.