பலத்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு மத்தியில் நீட் மறுதேர்வு நேற்று (ஜூன் 21) நடைபெற்ற நிலையில், இதன் வினாத்தாள் மீண்டும் கசிந்ததாக வீடியோ வைரலானது. இந்த வீடியோ முற்றிலும் போலியானது என தேசியத் தேர்வுகள் முகமை திட்டவட்டமாக மறுத்துள்ளது. தேர்வுகள் எவ்வித சமரசமுமின்றி பலத்த பாதுகாப்புடன் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
பரவும்வதந்தியும் NTA-வின்விளக்கமும்
இணையத்தில் வேகமாகப் பரவும் அந்த வீடியோவில், வினாத்தாள் வெளியானது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது குறித்து விளக்கமளித்துள்ள தேசியத் தேர்வுகள் முகமை மூத்த அதிகாரிகள், "இந்த வீடியோ அடிப்படை ஆதாரமற்றது, முற்றிலும் ஜோடிக்கப்பட்டது. நேர்மையாகப் படித்து தேர்வு எழுதிய மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் மனதளவில் குழப்பும் நோக்கில் சில விஷமிகளால் இந்த வீடியோ பரப்பப்படுகிறது. இதில் எள்ளளவும் உண்மை இல்லை.
இதை யாரும் நம்ப வேண்டாம். மறு தேர்வு மையங்களில் சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு எனப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன" என்று தெரிவித்துள்ளனர். மேலும், வதந்திகளைப் பரப்புவோர் மீது கடுமையான, சைபர் கிரைம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளனர்.
நீட் மறு தேர்வு
கடந்த மே 5-ம் தேதி நாடு முழுவதும் சுமார் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர். இந்த மாணவர்களுக்கான வினாத் தாள்கள் கசிந்த விவகாரம் வெடித்து, பெரும் சர்ச்சையானது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி, ஒட்டுமொத்தமாக தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
நீட் மறு தேர்வு நடைமுறைகள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் நடந்துள்ளதாகக் கூறியுள்ள NTA, சமூக வலைத்தளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை மாணவர்கள் புறக்கணிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்புவது குறித்த புகார்கள் தொடர்பாக தொடர்புகொள்ள,
வாட்ஸப் எண்:+91 8799711259
இ மெயில் முகவரி- factcheck@pib.gov.in ஆகியவை அறிவிக்கப்பட்டு உள்ளது.
