நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், வினாத்தாள் எப்படி இருந்தது என்று விரிவாக காணலாம்.

Continues below advertisement

2026ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 552 தேர்வு மையங்களில் 22.80 லட்சம் மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.4லட்சம் பேர் எழுதினர்.

720 மதிப்பெண்களுக்கு தேர்வு

நீட் தேர்வு மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. குறிப்பாக, இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பிரிவுகளில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும், பிரிவு A-வில் இருந்து 35 கேள்விகளும், பிரிவு B-யில் உள்ள 15 கேள்விகளில் இருந்து மொத்தம் 10 கேள்விகளும் இடம்பெறும். ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும். இந்தத் தேர்வில் தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் அளிக்கப்படும். குறிப்பாக ஒரு தவறான பதிலுக்கு, மதிப்பெண்ணில் நான்கில் ஒரு பங்கு, அதாவது ஒரு மதிப்பெண் கழிக்கப்படும்.

Continues below advertisement

இந்த நிலையில் ஒவ்வொரு பிரிவிலும் கேள்விகள் எப்படி கேட்கப்பட்டிருந்தது என்று பார்க்கலாம்.

இயற்பியல் – மிதமான கடுமையுடன் இருந்துள்ளது. இயற்பியல் பாடத்தைப் பொறுத்தவரை மின்னோட்டம், காந்த விளைவுகள், இயக்கவியல், நிலைமின்னியல், அலை ஒளியியல், சுழற்சி, எந்திரவியல், மின்காந்தவியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

வேதியியல் பிரிவு வினாத்தாள் எளிமைக்கும் மிதமான கடுமைக்கும் நடுவில் இருந்தது. இயற்பியல் வேதியியல் எளிதாக இருந்தது. கரிம வேதியியல் கேள்விகள் சற்றுக் கடினமாக இருந்தன.

அதேபோல இருப்பதிலேயே உயிரியல் பிரிவைச் சேர்ந்த கேள்விகள் எளிமையாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். மனித உடலியல், கால்நடை வளர்ப்பு, உயிரித் தொழில்நுட்பம், மனித இனப்பெருக்கம் மற்றும் உயிர் மூலக்கூறுகள், மரபியல், தாவர உடலியல் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

ஒட்டுமொத்தத்தில் நீட் தேர்வு வினாத்தாள் நடுத்தரமான கடினத்தன்மையுடன் இருந்துள்ளது. கேள்விகள் தீர்க்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தன. எனினும் அவற்றைச் செய்து முடிக்க நேரம் அதிகம் தேவைப்பட்டதாக தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்சர் கீ எப்போது?

நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ள நிலையில், விரைவில் தற்காலிக விடைத்தாளை தேர்வை நடத்திய தேசியத் தேர்வுகள் முகமை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.