நீட் தேர்வின் வினாத் தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் குளறுபடிகளும் முறைகேடுகளும் நிறைந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
’’தரம், தரம் என்றார்கள்!
நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வுமுறையே ஒரு moral ஊழல்! அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை, முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும் முறைகேடுகளும்தான்.
நீட் - முதல் கோணல் முற்றிலும் கோணல்!
RSS - BJP மாநாடுகளில் showpiece ஆக உட்கார நேரமிருக்கும் அ.தி.மு.க.வினருக்கு இவற்றை எதிர்த்து, தங்கள் எஜமானர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை!’’ என்று முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.
முன்னதாக பத்திரிகையாளர் அரவிந்த் குணசேகர் வெளியிட்டு இருந்த எக்ஸ் பதிவில், ’’மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் என்றும் என்டிஏ (தேசியத் தேர்வுகள் முகமை) அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்கள் இளங்கலை நீட் தேர்வு மதிப்பெண்களில் முறைகேடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதன்மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு குறைவான மதிப்பெண் பெற்ற தேர்வர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர வழிவகை செய்கிறார்கள்.
90 லட்சமா?
இதைக் குறிப்பிட்டு, நீட் தேர்வை முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார். நீட் தேர்வு மதிப்பெண்களை மாற்ற 90 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மதிப்பெண்கள் அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிப்பதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே தெரிவிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் தேடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன’’ என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த முறைகேட்டைக் குறிப்பிட்டு, நீட் தேர்வை முதல்வர் ஸ்டாலின் சாடி உள்ளார்.
