தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கெடுபிடிகளுக்கு மத்தியில் நீட் தேர்வு நடைபெற்ற நிலையில், தவித்த மாணவர்களுக்கு புத்தாடை, ஆவணங்கள் என காவலர்கள் ஓடிவந்து உதவினர்.
நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, பேனா மற்றும் காகித முறையில் நடைபெறுகிறது. பிற மத்திய நுழைவுத் தேர்வுகளைப் போல அல்லாமல், ஒரே நாளில் ஒரே ஷிஃப்டில் இந்தத் தேர்வு நடக்கிறது.
தமிழ்நாட்டில் எப்படி?
இந்தத் தேர்வை நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்காக 5,453 தேர்வு மையங்கள் இந்தியா முழுவதும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் 44 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 21,680 தேர்வர்கள் தேர்வை எழுதுகின்றனர். தமிழ்நாடு முழுவதும் 31 மாவட்டங்களில் 1.50 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுத உள்ளனர்.
அதிக பட்டன்களைக் கொண்ட ஆடைகளுக்கும் அனுமதி இல்லை
இந்த நிலையில், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கு நீட் தேர்வின்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல அதிக பட்டன்களைக் கொண்ட ஆடைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்வு மையம் அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு தேர்வு எழுந்த மாணவிகளில் சிலர் அதிக பட்டன்களைக் கொண்ட மேலாடைகளை அணிந்து வந்தனர். இதை அடுத்து, பட்டன்கள் அறுத்து நீக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து அங்கு பணியாற்றிய பெண் போலீஸ் ஒருவர், தன்னுடைய ஸ்கூட்டியில் மாணவியை அழைத்துச் சென்று, பட்டன் இல்லாத உடை வாங்கிக் கொடுத்து உதவினார்.
ஆதார் அட்டை, புகைப்படத்தை மறந்த மாணவர்
அதேபோல கோவை மாவட்டத்தில் பதற்றத்தில் ஆதார் அட்டை, புகைப்படத்தை ஒரு மாணவர் மறந்துவிட்டு வந்தார். இதை அடுத்து, சான்றுகளை உடனடியாகப் பதிவிறக்கம் செய்து, தேர்வு மைய வளாகத்துக்குள் ஓடிச்சென்று தலைமைக் காவலர் பாபு அளித்தார்.
வேலூர் மாவட்டத்தில், சாய்நாதபுரத்தில் உள்ள மகளிர் கலைக்கல்லூரி தேர்வு மையத்துக்கு, நீட் தேர்வு எழுத வந்துள்ளார். எனினும் கடைசி நேரத்திலேயே மாறி வந்தது தெரியவந்துள்ளது. இதை அறிந்த அங்கிருந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் ரஜினி, மாணவியை உடனடியாக தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து, சரியான தேர்வு மையத்துக்கு அழைத்துச் சென்றார். இத்தகைய சம்பவங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் உடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, எந்த ஸ்டிக்கரும் ஒட்டப்படாத வாட்டர் பாட்டில்கள், உடல்நிலைப் பிரச்சினை தொடர்பான சான்றிதழ்கள் ஆகியவற்றை மட்டுமே எடுத்துச்செல்ல மாணவர்களுக்கு, தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.