2024ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலைத் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது.

  


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


நீட் தேர்வில் அடிப்படை மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


தேர்வு எப்போது?


2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு மே 7ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முடிவுகள் ஜூன் 2வது வாரத்தில் வெளியாக உள்ளன.


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு பிப்ரவரி மாதம் தொடங்க உள்ளது. 


* மாணவர்கள் https://neet.nta.nic.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம்.


* குறிப்பாக NEET UG 2024 Registration என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 


* அதில், New Registration என்ற பகுதியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 


எனினும் விண்ணப்பிக்கும் முன்னர், தேர்வு அறிவிக்கையை முழுமையாகப் படித்துவிட்டு விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.


நீட் பாடத்திட்டம் 


நீட் தேர்வில் பொதுவாக மொத்தம் 180 கேள்விகள் இடம்பெறும்.  இதில், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 45 கேள்விகள் கேட்கப்படும். அதேபோல உயிரியல் பாடத்தில் இருந்து 90 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.


நீட் தேர்வில் பொதுவாக மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.  இதில், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து தலா 50 கேள்விகள் கேட்கப்படும். இதில் 45 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது.


அதேபோல உயிரியல் பாடத்தில் இருந்து 100 கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. இதில் 90 கேள்விகளுக்கு பதிலளித்தால் போதுமானது. இவை அனைத்தும் 720 மதிப்பெண்களுக்குக் கேட்கப்படும். சரியான பதிலுக்கு 4 மதிப்பெண்கள். தவறான பதிலுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் இருக்கும் என்பதால், மாணவர்கள் கவனத்துடன் எழுதுவது அவசியம். இதற்கு 1 மதிப்பெண் குறைக்கப்படும். 


கேள்வித் தாள்


பொதுவாக மத்தியக் கல்வி வாரியமான  என்சிஇஆர்டி 11, 12ஆம் வகுப்பு பாடத்திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் அமைக்கப்பட்டிருக்கும். நீட் தேர்வுக்குப் பயிற்சி அளிக்க தனியாக பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாணவர்கள் தாங்களாகவோ, பள்ளி மற்றும் பயிற்சி மையங்கள் மூலமாகவோ, நீட் தேர்வுக்கான பயிற்சியைப் பெறலாம்.


கூடுதல் விவரங்களுக்கு: தொலைபேசி எண்: 011- 40759000 


இ- மெயில்: neet@nta.ac.in