மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வில் இன்று (மார்ச் 18) முதல் மார்ச் 20 வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.


நீட் நுழைவுத் தேர்வு 


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் (பொது மருத்துவம்), பிடிஎஸ் (பல் மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (சித்த மருத்துவம்), ஆயுர்வேதம், யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


மே 5ஆம் தேதி தேர்வு


2024ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியாக உள்ளன. கடந்த ஆண்டு வெளிநாட்டு தேர்வு மையங்களிலும் தேர்வு நடந்த நிலையில், இந்த முறை இந்தியாவுக்குள் மட்டுமே தேர்வு நடைபெற உள்ளது. எனினும் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளன.


200 நிமிடங்களுக்குத் தேர்வு


நீட் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு, அதாவது 200 நிமிடங்களுக்கு நடைபெற உள்ளது. மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை நேரடி முறையில் நடைபெறும் தேர்வுக்கு, ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பிப்ரவரி 9ஆம் தேதி இதற்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், மார்ச் 16 வரை மாணவர்கள் விண்ணப்பித்தனர்.


இந்த நிலையில், விண்ணப்பங்களில் திருத்தத்தை மார்ச் 20ஆம் தேதி இரவு 11.50 மணி வரை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ’’மார்ச் 20-க்குப் பிறகு எந்த திருத்தங்களையும் மேற்கொள்ள முடியாது. கூடுதலாகக் கட்டணம் செலுத்த வேண்டிய திருத்தங்களை மேற்கொள்ள, கிரெடிட்/ டெபிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யூபிஐ மூலம் கட்டணம் செலுத்த வேண்டும்’’ என்று என்டிஏ தெரிவித்துள்ளது.


தேர்வர்கள் பாலினம், சமூகம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் திருத்தங்களை மேற்கொள்ளலாம். எனினும் கூடுதல் கட்டணம் செலுத்திய பிறகே மாற்றங்களை மேற்கொள்ள முடியும்.


தேர்வு முறை



தேர்வு குறித்த முழுமையான விவரங்களை அறிய: https://exams.nta.ac.in/NEET/images/neet-ug-2024-draft-ib-09022024.pdf 


கூடுதல் விவரங்களுக்கு: https://neet.nta.nic.in/


தொடர்புகொள்ள- தொலைபேசி எண்: +91-11-40759000


மின்னஞ்சல் முகவரி: neet@nta.ac.in