நாடு முழுவதும் நாளை (மே 7ஆம் தேதி) நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், என்னென்ன பொருட்களுக்கு மட்டுமே அனுமதி, எதற்கெல்லாம் அனுமதியில்லை என்று காணலாம்.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ் எனப்படும் பொது மருத்துவம், பிடிஎஸ் எனப்படும் பல் மருத்துவம், பிஎஸ்எம்எஸ் எனப்படும் சித்த மருத்துவம், பிஏஎம்எஸ் எனப்படும் ஆயுர்வேதம், பிஒய்எம்எஸ் எனப்படும் யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுழைவுத் தேர்வை என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.  


இதில் குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்புக்குத் தகுதியானவர்கள் ஆவர். நீட் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களைக் கொண்டு, கலந்தாய்வில் உரிய மருத்துவக் கல்லூரிகள் ஒதுக்கப்படும். 


499 நகரங்களில் நீட் தேர்வு


2023ஆம் ஆண்டுக்கான இளநிலை நீட் தேர்வு நாளை (மே 7ஆம் தேதி) நடைபெற உள்ளது. அன்று மதியம் 2 மணி முதல் 5.20 மணி வரை 3 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு ஒரே கட்டமாக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது. 499 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் குறைவாகும். 2022ஆம் ஆண்டில் 543 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளன.   


தேர்வு முடிவுகளில் புதிய மாற்றம்


நீட் தேர்வை எழுத 20,87,449  மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதேபோல மற்றொரு மாற்றத்தையும் என்டிஏ கொண்டு வந்துள்ளது . இதன்படி, ஒரே மதிப்பெண்களைப் பெற்ற 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு பிறந்த தேதி மற்றும் விண்ணப்ப எண்ணைக் கொண்டு, மதிப்பெண்களைத் தீர்மானிக்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் என்னென்ன பொருட்களுக்கு மட்டுமே அனுமதி, எதற்கு அனுமதியில்லை என்று காணலாம்.


எதற்கு அனுமதி?


* முகக் கவசம்
* கையுறை
* வெளிப்படையாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்
* 50 மில்லி அளவிலான கை சுத்திகரிப்பான்
* புகைப்படம் ஒட்டப்பட்ட நுழைவுச் சீட்டு
* அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை
* தேவையெனில் பிற சான்றிதழ்கள் (மாற்றுத்திறனாளி சான்றிதழ் மாதிரியான)


எதற்கு அனுமதியில்லை?


* ஸ்மார்ட் வாட்ச்
* துண்டு காகிதங்கள்
* கால்குலேட்டர்
* பிளாஸ்டிக் பவுச் 
* பென் டிரைவ்கள்
* ஹெட் போன்
* ப்ளூடுத் 
* பர்ஸ்
* பெல்ட் 
* தொப்பி
* ஏடிஎம், கிரெடிட் கார்டுகள்
* தின்பண்டங்கள்


* பென்சில், அழிப்பான்


இவ்வாறு தேசியத் தேர்வுகள் முகமை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.