NEET Results 2022 Result: இளங்கலை மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவு தேர்வு முடிவுகள் இன்று நண்பகல் 12 மணிக்கு வெளியாகிறது. நீட் தேர்வு முடிவுகளை neet.nta.nic.in என்ற முகவரியில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை தகவல் தெரிவித்துள்ளது. 


முன்னதாக, கடந்த ஜூலை 17-ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர். பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் இரண்டிற்குமான நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர்.


இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வுகள் இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது.


நீட் தேர்வானது பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். படிப்புகள் மட்டுமின்றி ஆயுர்வேதா, சித்தா படிப்புகள், யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளுக்கும் நடத்தப்பட்டது.


நீட் தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்பு மற்றும் ஓஎம்ஆர் தாள்கள் 30ஆம் தேதிக்குள் வெளியாகும் எனவும் நீட் தேர்வு முடிவுகள் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகும் என்றும் என்டிஏ அறிவித்தது. எனினும்17.78 லட்சம் தேர்வர்களின் தகவல்களைப் பதிவேற்றுவதில் சிரமம் இருப்பதால், சற்று தாமதம் ஏற்படும் என்று தெரிவித்த என்டிஏ, 31ஆம் தேதி விடைக்குறிப்புகளை வெளியிட்டது.  


இந்நிலையில், இந்த தேர்வு முடிவுகள் இன்று (செப்டம்பர் 7ஆம் தேதி) வெளியாக உள்ளன. 


சரி பார்ப்பது எப்படி?


neet.nta.nic.in என்ற இணையப் பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில் NEET UG 2022 result என்ற இணைப்பை க்ளிக் செய்க.
* விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பதிவிடவும். 
* NEET UG 2022 result எனப்படும் தேர்வு முடிவுகள் வெளியாகும். 
* மதிப்பெண் பட்டியலைத் தரவிறக்கம் செய்துகொள்ளவும். 


இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.