நீட் இளநிலை தேர்வு மற்றும் யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து, நீட் முதுநிலை தேர்வானது நேற்று இரவு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
நீட் முதுநிலை தேர்வு ரத்து:
இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வாக “நீட்” தேர்வு உள்ளது. இந்த தேர்வானது தேசிய தேர்வு முகமையால் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான இளநிலை நீட் தேர்வு கடந்த மே 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இதனிடையே ஜூன் 4 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. முடிவுகள் வெளியானதில் இருந்து, தேர்வில் குளறுபடிகள் இருந்ததாக கூறி பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை தொடர்ந்து, மாணவர்கள் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் இறங்கினர்.
இந்நிலையில் , யுஜிசி நெட் தேர்விலும் முறைகேடு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் நீட் இளநிலை தேர்வு ரத்து செய்யப்படவில்லை. இந்நிலையில், இன்று நீட் முதுநிலை தேர்வானது நடைபெற இருந்த நிலையில், நேற்று ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
ராகுல் கடும் தாக்கு:
இதையடுத்து, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதையடுத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார், அவர் தெரிவித்துள்ள ட்விட்டர் பதிவில், நரேந்திர மோடியின் ஆட்சியில் கல்வி முறை சீரழிந்து இருப்பதற்கு இது மற்றொரு உதாரணம். பா.ஜ.க ஆட்சியில், மாணவர்கள், தங்களது எதிர்காலத்தை காப்பாற்ற, அரசுடன் 'போராட' வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். காகிதக் கசிவு மோசடி மற்றும் கல்வி மாஃபியாவின் முன் எதுவும் செய்ய முடியாதபடி மோடி இருக்கிறார். மாணவர்களின் எதிர்காலத்துக்கு நரேந்திர மோடியின் திறமையற்ற அரசு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. அதிலிருந்து நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற வேண்டும் எனவும் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.