நீட் முதுகலைத் தேர்வு பலகட்டத் தாமதம், மாற்றங்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வுக்கு விண்ணப்பித்த தமிழக மருத்துவர்களுக்கு அனந்த்பூர், கர்னூல் ராஜமுந்திரி என ஆந்திரப் பிரதேசத்தின் ஊரகப் பகுதிகளிலும் பிற மாநிலங்களிலும் முதுகலை நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தன.
தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது, பிற மாநில மாணவர்களும் வெவ்வேறு மாநிலங்களில் நீட் முதுகலைத் தேர்வுக்கான மையங்கள் ஒதுக்கீடு செய்திருப்பதாக எக்ஸ் பக்கத்தில் வேதனை தெரிவித்து இருந்தனர். வெளி மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, அலைச்சலை மட்டுமல்லாது மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டனர்.
இதுகுறித்து அரசும், நாடாளுமன்ற எம்.பி.க்களும் உடனடியாகத் தலையிட்டு தேர்வு மையங்களே சொந்த மாநிலங்களுக்கே மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.
முதன்முதலில் செய்தி வெளியிட்ட ஏபிபி நாடு
இதுகுறித்து ஏபிபி நாடு முதன்முதலில் செய்தி வெளியிட்டு இருந்தது. செய்தியை வாசிக்க: NEET PG Exam Centre: பல நூறு கி.மீ. தாண்டி வெளி மாநிலங்களில் நீட் முதுகலை தேர்வு; தமிழக மாணவர்கள் குமுறல்- அரசு நடவடிக்கை எடுக்குமா?
இதைத் தொடர்ந்து நம் செய்தியைக் குறிப்பிட்டு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்வு மையத்தை மாற்ற வலியுறுத்தி இருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசனும் கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழக எம்.பி.க்கள் வில்சன், சச்சிதானந்தம் ஆகியோர் சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
முதுகலை நீட் தேர்வினால், தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நாடு முழுவதும் உள்ள எம்.பி.பி.எஸ் மருத்துவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்தும் தொலைதூர மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்களுக்கு தங்கள் இருப்பிடத்திலிருந்து 1000 கி.மீ. தொலைவில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது தேவையற்ற சிரமங்களை ஏற்படுத்தியுள்ளது என்றும் மனுவில் கூறப்பட்டு இருந்தது. எனவே, தேர்வு மையங்களை மாவட்டங்களுக்குள் அல்லது குறைந்த பட்சம் அந்தந்த மாணவர்களின் மாநிலத்திற்குள்ளேயே மறு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருச்சி மருத்துவருக்குக் கரூரில் தேர்வு மையம்
இதையடுத்து முதுகலை நீட் தேர்வு மையங்கள் அந்தந்த மாநிலங்களுக்கே மாற்றப்பட்டுள்ளன. இதுகுறித்து ஏற்கெனவே நம்மிடம் பேசியிருந்த திருச்சி மருத்துவர் தற்போது நன்றி தெரிவித்தார். ''முதன்முதலாக எங்களின் பிரச்சினைகளைப் பொதுவெளிக்குக் கொண்டுவந்த ஏபிபி நாடுவுக்கு நன்றி. அனந்த்பூரில் ஒதுக்கப்பட்டிருந்த தேர்வு மையம், தற்போது கரூர் மாவட்டத்துக்கு மாற்றப்பட்டுள்ளது'' என்று தெரிவித்தார்.
அதேபோல, அரியலூரைச் சேர்ந்த மருத்துவருக்குத் திருச்சியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. மையங்கள் மாற்றப்பட்டது தொடர்பாக தேர்வு எழுதும் மருத்துவர்களுக்கு இமெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பிற மாநில மருத்துவர்கள் வேதனை
இதற்கிடையே பிற மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், ’’கேரளா, கர்நாடகா, ராஜஸ்தானைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் முதுகலை நீட் தேர்வு மையங்கள் சொந்த மாநிலங்களிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன. ஏன் சில மாநிலங்களுக்கு மட்டும் பாரபட்சம்? எல்லா நீட் தேர்வர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல், சொந்த மாநிலங்களிலேயே மையங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும்’’ என்று வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து மத்திய அமைச்சகத்துக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.