2025ஆம் ஆண்டுக்கான நீட் முதுகலை நுழைவுத் தேர்வு இரண்டு ஷிஃப்டுகளில் நடைபெறும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது.
ஜூன் மாதம் நீட் தேர்வு
இதன்படி ஜூன் 15ஆம் தேதி கணினி மூலம் நீட் முதுகலைத் தேர்வு நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 9 முதல் 12.30 மணி வரையிலும் மதியம் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தனித்தனி ஷிஃப்டுகளில் தேர்வு நடைபெறும் என்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
எனினும் வாரியத்தின் இந்த முடிவுக்கு மருத்துவ மாணவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த முடிவு தவறானது என்றும் குழப்பங்களை ஏற்படுத்தும் எனவும் விமர்சித்துள்ளனர்.
மீண்டும் மோசமான முன்னுதாரணமா?
2024 நார்மலைசேஷன் நடைமுறையைப் போல 2025-ல் மோசமான முன்னுதாரணத்தை மீண்டும் மீண்டும் ஏற்படுத்த வேண்டாம் எனவும் தேர்வர்கள் சாடியுள்ளனர்.
இதுகுறித்து ஒருங்கிணைந்த மருத்துவ முன்னணி அமைப்பு, சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் ஒரு ஷிஃப்ட் முறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் மீண்டும் ஒரே தவறு
அதேபோல ஒற்றை ஷிஃப்ட் முறையில் தேர்வு நடத்தினால், வினாத்தாள் கசிந்துவிடும் என்பதால் இரண்டு ஷிஃப்ட் முறை நடத்தப்படுகிறதா? ஏன் மீண்டும் மீண்டும் ஒரே தவற்றைச் செய்கிறீர்கள்? என்றும் மருத்துவ மாணவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.