நீட் முதுகலைத் தேர்வை ஒரே ஷிஃப்ட்டில் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததால், தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. 

Continues below advertisement

ஜூன் 15ஆம் தேதி நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. 2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத உள்ளனர். இதற்கிடையே, இரண்டு ஷிஃப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். 

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ’’ஒரே ஷிஃப்ட்டில் தேர்வை நடத்த மருத்துவ வாரியம் போதிய தேர்வு மையங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லையா? இரண்டு ஷிஃப்ட்டுகளில் தேர்வை நடத்துவது தன்னிச்சையான தன்மையை உருவாக்குகிறது. அதேபோல தேர்வர்களுக்கு ஒரே மாதிரியான தரத்தில் கேள்வித் தாள்கள் இருக்காது’’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். 

புதிய தேதி எப்போது?

இந்த வழக்கில் ஒரே ஷிஃப்டில் தேர்வை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய தேர்வு மையங்கள், கட்டமைப்பு வசதிகளைச் செய்ய, தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் மருத்துவ அறிவியலுக்கான தேசியத் தேர்வு வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.