முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், 2 முறை முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. 


இந்த நிலையில் புதிய தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதன்படி முதுகலை நீட் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி 2 ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளது. 


எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வை எழுதுகின்றனர். குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ நிறுவனங்களில் எம்டி (Doctor of Medicine), எம்எஸ் (Master of Surgery) மற்றும் முதுகலை டிப்ளமோ படிப்புகளில் சேர நீட் முதுகலைத் தேர்வு நடத்தப்படுகிறது.


42,500 இடங்கள்


இந்தியா முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகான எம்டி, எம்எஸ் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு என 42,500 இடங்கள் உள்ளன.  குறிப்பாக 6,102 அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை/ மத்தியப் பல்கலைக்கழகங்களில் 26,168 எம்.டி. இடங்கள், 13,649 எம்.எஸ். இடங்கள், 922 முதுகலை டிப்ளமோ இடங்கள் உள்ளன.


தமிழ்நாட்டில் சுமார் 4 ஆயிரம் இடங்கள் உள்ளதாக தெரிகிறது. அனைத்து மருத்துவக் கல்வி நிறுவனங்களிலும் முதுநிலை மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படுகிறது. 


2 முறை மாற்றி வைக்கப்பட்ட நீட் முதுகலைத் தேர்வு


ஜூலை 7ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே ஜூன் 23ஆம் தேதி நீட் முதுகலைத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் தேர்வுக்கு 12 மணி நேரத்துக்கு முன்னதாக ஜூன் 22ஆம் தேதி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.


ஏற்கெனவே நீட் இளநிலைத் தேர்வில் ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு, மோசடி, கருணை மதிப்பெண்களில் குளறுபடி உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. யுஜிசி நெட் தேர்விலும் குளறுபடி நடந்ததாகக் கூறி தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிஎஸ்ஐஆர் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் முதுகலை நீட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. 



இதற்கிடையே நீட் முதுகலைத் தேர்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி, 2 ஷிஃப்டுகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://natboard.edu.in/ என்ற இணையதளத்தைக் காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வர்கள் https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/12/1113694825971178555514.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து, தேர்வு குறித்த முழு அறிவிக்கையைக் காணலாம்.