திட்டமிட்ட தேதி அன்று நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று மக்களவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கு தனித் தனியே நீட் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை நீட் தேர்வு முடிந்து தற்போது மருத்துவ கல்லூரியில் சேர மருத்துவ கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 5ஆம் தேதி நடைபெற இருந்தது.
இதற்கிடையே தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று தேர்வர்கள் கோரிக்கை விடுத்தனர். தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், திட்டமிட்ட தேதி அன்று நீட் முதுநிலைத் தேர்வு நடைபெறும் என்று மக்களவையில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதிபடத் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உறுப்பினர் கவுரவ் கோகோய் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், மார்ச் 5 அன்று தேர்வு நடத்தப்பட வேண்டும். இது 5 மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. நுழைவுத் தேர்வை எழுதும் மாணவர்கள் இதற்காகத் தயாராகி வருகின்றனர்.
முன்னதாகத் தேர்வுகள் 7 முதல் 8 மாதங்கள் வரை தாமதமாகின. சில தேர்வுகள் 4 மாதங்கள் தாமதமாக நடத்தப்பட்டன. இப்போதும் தள்ளி வைத்தால், அதே சூழல் ஏற்படும். அதனால் இதைச் சரிசெய்ய வேண்டியது அவசியம் ஆகும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
நீட் தேர்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஎஸ்எம்எஸ் (சித்தா), ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி உள்பட இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கும் முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கும் தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வு நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என அழைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
முன்னதாக, கடந்த ஜூலை 17-ந் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை எழுத நாடு முழுவதும் 18 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேர் விண்ணப்பித்தனர். பி.டி.எஸ். எனப்படும் பல் மருத்துவம் மற்றும் எம்.பி.பி.எஸ். எனப்படும் இளங்கலை மருத்துவ படிப்புகள் இரண்டிற்குமான நீட் தேர்வை மொத்தம் 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர் எழுதியிருந்தனர்.
இந்த தேர்வு நாடு முழுவதும் மொத்தம் 543 நகரங்களில் அமைக்கப்பட்ட 3 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடைபெற்றது. நீட் தேர்வுகள் இந்தியாவில் உள்ள நகரங்கள் மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள மாணவர்கள் இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்காக கொழும்பு, காத்மாண்டு, பாங்காக், கோலாலம்பூர், சிங்கப்பூர், துபாய், அபுதாபி, மஸ்கட், ஷார்ஜா, குவைத், தோஹா, மனாமா, ரியாத், லாகோஸ் நகரங்களிலும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.