மருத்துவ சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களுக்கான நீட் தேர்வு பாடத்திட்டத்தில் இறுதி நிமிடத்தில் மாற்றம் கொண்டு வந்ததை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்துள்ளது. ’மாணவர்கள் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆட்டத்துக்கான ஃபுட்பால் அல்ல’ என உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வுகள் வருகின்ற நவம்பர் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இதுகுறித்த அறிவிப்பு 23 ஜூலை 2021ல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாடத்திட்டத்தில் மாற்றம் எல்லாம் ஆகஸ்ட் 31ல் தான் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து 41 மருத்துவர்களால் தொடரப்பட்ட வழக்கில் தேசியத் தேர்வு வாரியம், தேசிய மருத்துவக் ஆணையம் மற்றும் மத்திய அரசை கடினமாகச் சாடியுள்ளது உச்சநீதிமன்றம். 




’மாணவர்கள் இதுபோன்ற தேர்வுகளுக்காக மாதக்கணக்கில் தயார் செய்கிறார்கள். தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட பிறகு எதற்காகப் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறீர்கள்? உங்கள் தரப்பு வாதத்தையும் கேட்கிறோம் ஆனால் உங்களது இந்தச் செயல் அதிருப்திகரமானதாக உள்ளது. உங்களிடம் அதிகாரம் உள்ளது என்பதற்காக அதனை இப்படித்தான் பயன்படுத்த வேண்டுமா? உங்கள் அதிகார விளையாட்டில் மாணவர்களைப் பந்தாகப் பயன்படுத்தாதீர்கள். என விசாரனை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 
நீதிபதி நாகரத்னா கூறுகையில், ‘புதிய பாடத்திட்டம் நுழைவுத்தேர்வுக்கானதாக இல்லாமல் இறுதியாண்டுத் தேர்வுக்கான பாடத்திட்டம் போல உள்ளது’ எனக் கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பு ஒருவாரத்துக்குள் விளக்கம் அளிக்கும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


முன்னதாக, நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அனைத்திந்திய கோட்டாவில் 27 சதவிகித இடஒதுக்கீடு அளித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கில் மத்திய அரசு 2 வாரத்துக்குள் விளக்கமளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம்.  உத்தரவிட்டுள்ளது.



நீட் மருத்துவத் தகுதித் தேர்வில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதமும் பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகிதமும் இடஒதுக்கீடு செய்து அண்மையில் மத்திய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வந்தது. இந்த இரண்டு இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ‘அப்போது பொதுப்பிரிவினர் என்ன செய்வார்கள்?’ எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசுட் மற்றும் நாகரத்னா தலைமையிலான அமர்வு வருகின்ற 6 அக்டோபருக்குள் மத்திய அரசில் இதற்கு பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.  மற்றொரு மனுவில் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்களுக்கான நீட் ஒதுக்கீட்டுக்கான வரையறையாக 8 லட்ச ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் 2021ம் ஆண்டுக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் டாகடர் மது கவிஷ்வர் என்பவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.