நாடு முழுவதும் 2022ஆம் ஆண்டில், 17.64 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வின் முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில் 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 2 ஆண்டுகளாகக் குறைந்துள்ளது. 


அதேபோல நீட் தேர்வில் தேசிய அளவில் 715 மதிப்பெண்கள் பெற்றதே முதலிடமாக உள்ளது. தமிழக அளவில் 705 மதிப்பெண்களைப் பெற்று 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். 


மாநில வாரியாகப் பார்க்கும்போது உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மாநில மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இந்த முறை 132,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நிலையில், இதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 


5 ஆண்டு புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?


தமிழ்நாட்டில் 2018ஆம் ஆண்டில் 39.56 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இந்த விகிதம் 2019ஆம் ஆண்டில் 48.57 ஆக உயர்ந்தது. இது 2020ஆம் ஆண்டில் 57.43% மாணவர்களாக உயர்ந்தது. எனினும் 2021ஆம் ஆண்டு தேர்ச்சி விகிதம் கிட்டத்தட்ட 3 சதவீதம் அளவுக்குக் குறைந்து, 54.40 ஆக இருந்தது. இது தற்போது மேலும் குறைந்து 51.28% ஆக உள்ளது. 


2020ஆம் ஆண்டு 99,610 மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, 57,215 பேர் தேர்ச்சிபெற்றனர். அதாவது 2020-ல் 57.43 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்திருந்தனர். 2021-ல் 1,12,894 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 1,08,318 பேர் தேர்வை எழுதினர். இதில், 58,922 மாணவர்கள் (54.40%) தேர்ச்சி பெற்றனர். இந்த ஆண்டு (2022-ல்) 51.28% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். அதாவது 1,32,167 பேர் தேர்வு எழுதி, அதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 




அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சியும் குறைவு


நீட் தேர்வை இந்த ஆண்டு 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் எழுதிய நிலையில் 80 சதவீத மாணவர்கள் தோல்வியைச் சந்தித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 2018ஆம் ஆண்டு  19,680 மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2019-ல் விண்ணப்ப விகிதம் 8,132 ஆகக் குறைந்தது. இது 2020-ல் மேலும் குறைந்து 7 ஆயிரமாக ஆனது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட நிலையில், சற்றே அதிகரித்து 11,236 ஆக உயர்ந்தது. 2022-ல் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 17,517 என்ற நிலையில், தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 


இந்த ஆண்டில் ஒட்டுமொத்த தேசிய தேர்ச்சி விகிதம் 56 சதவீதமாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 51.28 ஆகக் குறைந்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகத் தொடர்ச்சியாகத் தேர்ச்சி விகிதம் குறைய என்ன காரணம்?




கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம். 


கொரோனா தொற்றைச் சுட்டிக்காட்டி கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி ABP நாடுவிடம் பேசினார். அவர் கூறும்போது, ''தேர்ச்சி விகிதம் குறைந்தாலும், நீட் தேர்வை எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை எழுதியவர்கள், கடந்த ஆண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது 11ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தனர். அரசாலும் முறையாக நீட் பயிற்சி கொடுக்க முடியவில்லை. பயிற்சி மையங்களும் ஆன்லைன் மூலமே கற்பித்தலை நிகழ்த்தியது. 


அடிப்படையை சரியாக, முறையாகக் கற்க முடியாமல், இந்த ஆண்டு மாணவர்களால் போதிய தேர்ச்சியைப் பெறவில்லை. கொரோனா கட்டுக்குள் உள்ள நிலையில், இனி வரும் ஆண்டுகளில் இந்த நிலை சரியாகும் என்று நம்புகிறோம். அதேபோல 11ஆம் வகுப்புப் பாடங்களுக்கும் அரசு, தனியார் பள்ளிகள் முக்கியத்துவம் கொடுத்து, பாடங்களை ஆஃப்லைன் முறையில் நேரடியாக நடத்த வேண்டும். அடிப்படைகளை சரியாகக் கற்றால்தான், செயல்முறைகளை மாணவர்கள் சிறப்பாகப் பயில முடியும்.  


கேள்விக்கு உள்ளாகும் நுழைவுத் தேர்வு முறை; 12%மதிப்பெண்கள் இருந்தால் தேர்ச்சியா?


நீட் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைந்துகொண்டே போகிறது. கடந்த முறை 108 மதிப்பெண்கள் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக இருந்த நிலையில் இந்த முறை மதிப்பெண்கள் 93 ஆகக் குறைந்திருக்கிறது. அதாவது வெறும் 12% மதிப்பெண்களைப் பெறும் மாணவரிடம், பணம் இருக்கும்பட்சத்தில் அவரால் மருத்துவ இடத்தைப் பெற முடியும். இந்த நிலை கல்வி/ நுழைவுத் தேர்வின் தரத்தையே கேள்விக்கு உள்ளாகுகிறது. இதை அரசு பரிசீலனை செய்ய வேண்டும்'' என்று கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்தார். 




கேள்வித் தாளும் மாணவர்கள் தயாரான விதமுமே தேர்ச்சி விகிதம் குறையக் காரணம் என்கிறார் உயர் கல்வி ஆலோசகர் அஸ்வின். இதுகுறித்து ABP நாடுவிடம் அவர் பேசும்போது, ''தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 3.17 அளவுக்குக் குறைந்திருக்கிறது. இதற்கு உயிரியல் பாடத்தில் இருந்து கேள்விகள் சற்றே கடினமாகக் கேட்கப்பட்டதே முக்கியக் காரணம். சில கேள்விகள் எதிர்பாராத கோணத்தில் இருந்தும் கேட்கப்பட்டிருந்தன. வழக்கமாக எளிமையாகக் கேட்கப்படும் உயிரியல் பாடத்தில், இந்த முறை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்க அதிக நேரம் பிடித்தது. எளிதில் பதிலளிக்க முடிகிற உயிரியல் பகுதிக்குக் கூடுதல் நேரம் தேவைப்பட்டதால், கால அவகாசம் போதவில்லை. இதனால், மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்து, தேர்ச்சியும் சரிந்துள்ளது. 


நீட் மட்டுமல்ல ஜேஇஇ உள்ளிட்ட பிற நுழைவுத் தேர்வுகளிலும் மாணவர்களின் மதிப்பெண் ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. இதற்கு மாணவர்கள் தேர்வுக்குத் தயாராகும் விதமும், கவனக்குவிப்பில் குறைவும் சுற்றுப்புறச் சூழலும் காரணமாக உள்ளதைப் பார்க்க முடிகிறது. 


பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது தவறு!


அதேபோல அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்தும் குறைந்த மதிப்பெண்கள் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் இருக்கிறது. இதற்கு செலக்டிவாக மாணவர்கள் குறிப்பிட்ட பாடங்களைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது முக்கியக் காரணம். இது முக்கியமான பாடம், கட்டாயம் கேள்விகள் கேட்கப்படும், இது முக்கியத்துவம் குறைவான பாடம் என்று தேர்வு செய்து படிக்கக்கூடாது.  




அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதால், தலைசிறந்த மருத்துவக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கான கட்-ஆஃப் குறைந்துள்ளது'' என்று உயர் கல்வி ஆலோசகர் அஸ்வின் தெரிவித்தார்.  


மருத்துவக் கல்வி பயில நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்று ஆகிவிட்ட சூழலில், அரசு அதற்குத் தேவையான பயிற்சி, வழிகாட்டலை முறைப்படுத்துவது முக்கியம் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.