ஜூலை 16ஆம் தேதி காலை 10 மணிக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளிப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:


"தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் மற்றும் தமிழ்நாடு மாநிலத்திலோ அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியிலோ இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி நிறுவனங்களில் இருப்பிட சான்றிதழ்களுடன் முதுகலை படிப்பு ஒதுக்கீட்டிற்கு விண்ணப்பிக்க தகுதி உள்ளவர்கள்.‌ இதற்கு மாறாக வந்த செய்திகள் தவறானவை. 


மேலும் பிற மாநிலங்களை பூர்வீகமாகக் கொண்டவர்கள் தமிழகத்தில் இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எம்பிபிஎஸ், பிடிஎஸ் முடித்தவர்கள் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் உள்ள திறந்தவெளி அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு மட்டுமே தகுதியானவர்கள்.


தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள மொத்தம் 20 ஆயிரம் மருத்துவப் பணியிடங்களில் 1021 பணியிடங்கள் மட்டுமே தற்போது காலியாக உள்ளது. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்கு தேர்வு நடத்தப்பட்டதில் 25 ஆயிரம் பேர் இத்தேர்வை எழுதினர். ஒரு மாதத்திற்குள் காலியாக உள்ள மருத்துவ பணியிடங்கள் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. 


தமிழ்நாட்டில் மருத்துவம் படிப்பதற்கு இதுவரை 32,649 மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். மேலும் மாணவர்கள் சான்றிதழ் வாங்க கால தாமதம் ஏற்படுவதால், விண்ணப்பிக்க இரண்டு நாள் கால அவகாசம் கேட்டிருந்தனர். இதனால் விண்ணப்பிக்க ஜூலை 10-ம் தேதி என்பது, 2 நாள் கூடுதலாக்கி ஜூலை 12-ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 


இதனை அடுத்து மத்திய அரசும், மாநில அரசும் ஒரே தேதியில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்த தேதி அறிவிக்க இன்னும் 10 நாட்கள் ஆகலாம். ஆனால் அதுவரை காத்திருக்காமல், வருகிற 16-ம் தேதி காலை 10 மணிக்கு எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்பிற்கான தரவரிசைப் (மெரிட்) பட்டியல் வெளியிடப்படும்’’.


இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.


 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் 


தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நிலவரப்படி 37 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5,175 எம்பிபிஎஸ் இடங்கள், இரண்டு அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் 200 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. அதில், 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளது. எஞ்சிய இடங்கள் மாநில அரசு ஒதுக்கீட்டு இடங்களாக உள்ளன. 


அதேபோல், 20 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 3,050 எம்பிபிஎஸ் இடங்களில் 1,610 இடங்களும், 20 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,960 பிடிஎஸ் இடங்களில் 1,254 இடங்களும் மாநில ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. இந்த அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு 569 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 


மருத்துவப் படிப்புகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு ஜூன் 28ஆம் தேதி தொடங்கிய நிலையில்,  மாணவர்கள் ஜூலை 12ஆம் தேதி மாலை 5 மணி வரை  https://tnmedicalselection.net/  மற்றும் www.tnhealth.tn.gov.in ஆகிய இணைய முகவரிகளில் விண்ணப்பிக்கலாம்.