நீட் தேர்வு பயிற்சி மையங்களின் வருவாய் ரூ.1.34 லட்சம் கோடியா? என்று தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் பகீர் குற்றச்சாட்டு எழுப்பி உள்ளார்.

Continues below advertisement

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்று தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் பிரம்மா பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

எழும்பூரில் ஆர்ப்பாட்டம்

சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே அகில இந்திய மக்கள் இயக்கத்துடன் இணைந்து தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

Continues below advertisement

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கட்சியின் தலைவர் டாக்டர் பிரம்மா பாலசுப்பிரமணியம், ஆண்டுதோறும் மத்திய அரசு நடத்தி வரும் நீட் தேர்வில், இந்த ஆண்டு பல்வேறு குளறுபடிகள் மற்றும் வினாத்தாள் கசிவு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும், இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், இல்லையெனில் பிரதமர் நரேந்திர மோடி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மத்திய அரசுக்கு லாபம்

மேலும், ஆண்டுதோறும் நீட் தேர்வு விண்ணப்பங்கள் மூலம் மத்திய அரசுக்கு சுமார் ரூ.3,500 கோடி வருவாய் கிடைப்பதாகவும், செலவுகள் போக ரூ.500 முதல் ரூ.600 கோடி வரை லாபம் கிடைப்பதாகவும் அவர் கூறினார்.

அதேபோல், நீட் பயிற்சி மையங்கள் மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.1.34 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்படுவதாகவும், இந்த பயிற்சி மையங்களுக்கு வழங்கப்படும் அனுமதிகள் மூலம் மத்திய அரசுக்கும் வருவாய் கிடைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இந்த பயிற்சி மையங்களிடம் இருந்து பெறப்படும் பல்வேறு நன்மைகள் காரணமாகவே மத்திய அரசு நீட் தேர்வை தொடர்ந்து நடத்த விரும்புவதாகவும், அதை ரத்து செய்யும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிப்பு

மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளால் ஆண்டுதோறும் நீட் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், சில மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை போன்ற விபரீத முடிவுகளுக்கு தள்ளப்படுவதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.

எனவே, மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்து, அந்தந்த மாநிலங்கள் தங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்தும் வகையில் சட்ட மற்றும் நிர்வாக மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தங்களது போராட்டங்கள் தொடரும் எனவும் தமிழ்நாடு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் பிரம்மா பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 3 நாட்களாக, அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான் பூச்சி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.