நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், தேர்வு எழுதிய மாணவர்களில் தேசிய அளவில் 56.2% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கட் -ஆஃப் 5 முதல் 10 மதிப்பெண்கள் வரை அதிகரிக்கலாம் என்று கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். 


நீட் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி 499 நகரங்களில் நடைபெற்றது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 513 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 936 மாணவர்களும், 13 மாற்றுப் பாலினத்தவர்களும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 462 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர். இதில் 20,38,596 பேர் தேர்வை எழுதினர். இதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976  பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.  இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் 99.9999019% மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருடன் ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த போரா வருண் சக்கரவர்த்தியும் முதலிடம் பிடித்துள்ளார்.


தமிழ்நாடு நிலவரம்


தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 583 பேர் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்தனர்.தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1,44,516 பேர் தேர்வு எழுதினர். சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




தமிழ் மொழியில் 30,536 மாணவர்கள் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இது 2019-ல் 1017 மாணவர்கள் ஆகவும் 2020-ல் 17,101 ஆகவும் இருந்தது. அதேபோல 2021-ல் 19,868 மாணவர்களும் 2022-ல் 31,965 மாணவர்களும் நீட் தேர்வை எழுத விண்ணப்பித்து இருந்தனர்.


இதுகுறித்து கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி, ABP NADU-விடம் பேசினார். அவர் கூறியதாவது:


’’தமிழ்நாட்டைப் பொறுத்தவரை முதலிடங்களைப் பிடித்தவர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களை விட அதிகரித்து இருந்தாலும், ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு 57.43 ஆக இருந்த தேர்ச்சி விகிதம், இந்த ஆண்டு 54.45 ஆகக் குறைந்துள்ளது. தேர்வில், உயிரியல் பாடத்தின் கடினத்தன்மை குறைவாக இருந்ததால், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளன.  


இந்த ஆண்டு எப்படி?


2022ஆம் ஆண்டு 700-க்கு மேற்பட்ட மதிப்பெண்களை 94 மாணவர்கள் பெற்றனர். இந்த முறை 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பெற்றுள்ளனர். 600-க்கு மேல் 21 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்ற நிலையில், 2023-ல் 28 ஆயிரம் மாணவர்கள் 600-க்கு மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


 கடந்த ஆண்டு 500 மதிப்பெண்களுக்கு மேல் 80 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பெற்ற முறையில், இந்த முறை 1,05,000 பேர் பெற்றுள்ளனர். இதனால் இந்த ஆண்டு கட் - ஆஃப் மதிப்பெண்கள் உயர அதிகம் வாய்ப்பு உள்ளது. நாடு முழுவதும் புதிய கல்லூரிகள் திறக்கப்பட்டு, இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ள சூழ்நிலையில், 5 முதல் 10 மதிப்பெண்கள் வரை கட் -ஆஃப் உயர வாய்ப்புள்ளது. 




சாதி - தோராய மதிப்பெண்கள்  


ஓ.சி. மாணவர்கள்- 590+ மதிப்பெண்கள் 


பி.சி. மாணவர்கள்- 536- 540 மதிப்பெண்கள்


பி.சி. முஸ்லிம் மாணவர்கள்- 512 முதல் 515 மதிப்பெண்கள் வரை 


எம்.பி.சி. மாணவர்கள்- 505 முதல் 508 மதிப்பெண்கள் வரை 


எஸ்.சி. மாணவர்கள்- 415 முதல் 420 மதிப்பெண்கள் வரை.


கடந்த சில ஆண்டுகளாக பொதுத்தேர்வுக்கு பதிலாக நுழைவுத் தேர்வுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கும் சூழல் உருவாகி உள்ளது. மீண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதுவோரும் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுமே அதிக மதிப்பெண்களைப் பெறுகின்றனர். இதன் மூலம் நீட் தேர்வு பணக்கார மாணவர்களுக்கு  ஏற்றது என்பதும் பயிற்சி மையங்களை ஊக்குவிப்பதும் நிரூபணம் ஆகியுள்ளது. ’’


இவ்வாறு கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். 


இந்த சூழலில் ஆளும் அரசுகள் கிராமப்புற, ஏழை மாணவர்களின் கல்வி நிலையை எண்ணிப் பார்க்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.