கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று (ஜூன் 21) நடந்து முடிந்த நிலையில், தேர்வு மையத்தின் கழிப்பறையில் ரகசியமாக ஸ்மார்ட்போனை மறைத்து வைத்து முறைகேட்டில் ஈடுபட்ட மாணவரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தேர்வு நடைமுறையில் உள்ள ஓட்டைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
நடந்தது என்ன?
தேசிய தேர்வு முகமை நடத்தும் நீட் தேர்விற்கு, மெட்டல் டிடெக்டர் சோதனை மற்றும் தீவிர உடல் பரிசோதனை எனப் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பது வழக்கம். இந்த கெடுபிடிகளில் சிக்காமல் இருக்க, சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு 'ஹைடெக்' திட்டத்தைத் தீட்டியுள்ளார்.
தேர்வு தொடங்குவதற்கு காலை 7 மணி வாக்கில் எப்படியோ தேர்வு மையத்திற்குள் நுழைந்த அந்த மாணவர், அங்கிருந்த கழிப்பறை ஒன்றில் தனது ஸ்மார்ட்போனை யாருக்கும் தெரியாமல் ஃபளஷ் டேங்க்கில் ரகசியமாக மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு, எந்தப் பொருளும் இல்லாமல் சாதாரண மாணவரைப் போல நுழைவு வாயிலில் வழக்கமான பரிசோதனைகளை முடித்துவிட்டு தேர்வு அறைக்குள் சென்றுள்ளார்.
கழிப்பறையில் நடந்த மோசடி
தேர்வு தொடங்கி வினாத்தாள் வழங்கப்பட்டதும், சிறிது நேரம் கழித்து தனக்கு வயிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கழிப்பறைக்குச் செல்ல வேண்டும் என கண்காணிப்பாளரிடம் அந்த மாணவர் அனுமதி கேட்டுள்ளார். நேராக கழிப்றைக்குள் சென்ற அவர், தான் முன்கூட்டியே மறைத்து வைத்திருந்த செல்போனை எடுத்து, விடைகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
சிக்கியது எப்படி?
மாணவர் நீண்ட நேரமாக தேர்வு மையத்துக்கு வராததை அறிந்து, சந்தேகம் அடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படையினர், அவர் சென்ற கழிவறையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அவர் கையும் களவுமாகச் சிக்கினார். அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் சிக்கியது. உடனடியாக தேர்வு மைய அதிகாரிகள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
போலீஸ் விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், முறைகேட்டில் ஈடுபட்ட அந்த மாணவரை உடனடியாக கைது செய்து, செல்போனையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வை எழுதியுள்ளனர்.
பலத்த பாதுகாப்பையும் மீறி நடந்த இந்தச் சம்பவம், சக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
