தேசிய பாதுகாப்பு அகடமி, கடற்படை அகடமி தேர்வு வரும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி அன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முன்னதாக, இந்தத் தேர்வானது வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி அன்று நடைபெறுவதாக இருந்தது. அன்றைய நாளில் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயலாக்க அலுவலர் பணியிடத்துக்கான தேர்வை, ஒன்றியப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ளதால், இந்தத் தேர்வு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், “ இப்போது நிலவும் சூழலின் பல்வேறு தன்மைகளைக் கணக்கில் எடுத்துக்கொண்டு பணியாளர் தேர்வாணையமானது, தேசிய பாதுகாப்பு அகடமி மற்றும் கடற்படை அகாடமி ஆகியவற்றின் தேர்வு (2)-ஐ, 2021 நவம்பர் 14 அன்று நடத்தத் தீர்மானித்து உள்ளது. அதே நாளன்று ஏற்கெனவே திட்டமிட்டபடி ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகளுக்கான தேர்வு(2)ஐயும் சேர்த்து நடத்த முடிவெடுக்கப்பட்டு உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த பாதுகாப்பு மற்றும் கடற்படைத் தேர்வானது 75 மையங்களில் நடைபெறும். தேர்வில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் விரும்பினால் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு இந்த மாதம் 29ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருக்கிறது.


”தேர்வுக்கு விண்ணப்பித்துக் கொண்டு இருக்கும் போட்டியாளர்கள் 75 மையங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் இணையவழி விண்ணப்பம் புதியதாக பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. வரும் 29 ஆம் தேதி மாலை 6 மணிவரை இந்த விண்ணப்பம் கிடைக்கும். இதில் முக்கியமானது, கடைசி நேரம் இது தான் என்றாலும், தேர்வு மையத்தைத் தேர்வு செய்வதற்கான அவகாசமும் அன்றைய நாள் இதே நேரம்தான். அதாவது, மாலை 6 மணிக்கு சற்று முன்னதாக விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்யத் தொடங்கினால், 6 மணிக்கு மேல் அதை சமர்ப்பிக்க முடியாது. அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை போட்டியாளர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இந்த பாதுகாப்புத் துறைத் தேர்வானது, தேசிய பாதுகாப்பு அகடமியின் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைப் பிரிவுகளில் சேர்வதற்கான 148 ஆவது சுற்று படிப்புப் பயிற்சிக்காகவும், இந்திய கடற்படை அகாடமியின் 110ஆவது சுற்று படிப்புப் பயிற்சிக்காகவும் நடத்தப்படுகிறது. 2022 ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி அன்று இவை தொடங்கும். மொத்தம் 400 பேருக்கு இதில் இடம்பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கும். இதிலும் தேசிய பாதுகாப்பு அகடமியில் இராணுவத்துக்கு 208 பேர், கடற்படையில் 42 பேர், விமானப் படைக்கு (களப் பணிகளுக்கான 28 பேர் உள்பட) 120 பேர் என மொத்தம் 370 பேருக்கு இடம் கிடைக்கும். 


வருங்கால வைப்பு நிதி அமைப்பின் செயலாக்க அதிகாரி- கணக்கு அலுவலர் தேர்வானது முன்னதாக கடந்த மே 9ஆம் தேதி அன்று நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. கொரோனா இரண்டாவது அலையின் பரவல் காரணமாக, வருங்கால வைப்பு நிதித் திட்ட அலுவலர் தேர்வும் தள்ளிவைக்கப்படுவதாக தேர்வாணையம் கடந்த ஏப்ரலில் அறிவித்தது.