பாலின சமத்துவ சீருடைகள், வகுப்பறை இருக்கைகள் ஏற்பாடு, இந்திய கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


தேசிய கல்வி கொள்கை


மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை அண்மையில் வெளியிட்டது. இதில் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அறிஞர்கள் பங்குகொண்டு, கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 


புதிய கல்விக் கொள்கையை இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு 2020ஆம் ஆண்டு வெளியிட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் படிப்படியாக கல்விக் கொள்கையை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை மத்தியக் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, தொடக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு 2ஆம் வகுப்பு வரை எழுத்துத் தேர்வு தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆண்டுக்கு 2 முறை சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வை நடத்தவும் செமஸ்டர் முறையை அறிமுகம் செய்யவும் முன் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


இதைத் தாண்டி, பாலின சமத்துவ சீருடைகள், வகுப்பறை இருக்கைகள் ஏற்பாடு, இந்தியக் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் ஆகியவை குறித்தும் வரைவில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 


அரை வட்ட வடிவில்


வகுப்பறைகளில் கரும்பலகைகளும் ஆசிரியர்களுமே கற்றலின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றனர். அவற்றை நோக்கியே மாணவர்கள் அமரவைக்கப்படுகின்றனர். இதற்கு பதிலாக அரை வட்ட வடிவில் மாணவர்களை அமர வைக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல படிக்கும் குழந்தைகளே முன் இருக்கைகளை ஆக்கிரமிப்பதைத் தவிர்க்க வேண்டும்.  இது படிப்பவர்கள் இன்னும் படிப்பதையும் படிப்பில் ஆர்வம் குறைந்த குழந்தைகள், படிக்காமல் இருப்பதையும் ஊக்குவிக்கிறது. 


அதேபோல பாடம் நடத்தும்போது எத்தனை குழந்தைகளின் குரல்கள் ஒலிக்கின்றன என்பதைத் தொடர்ந்து கவனித்துவர வேண்டும். இதன்மூலம் யாரெல்லாம் வகுப்பில் சுறுசுறுப்பாக கவனிக்கிறார்கள், யாரால் தாங்கள் நினைப்பதைத் தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை என்றெல்லாம் அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் கற்பிக்க முடியும். 


பள்ளி பிரார்த்தனைக் கூடம்


அசெம்ப்ளி என்று அழைக்கப்படும் பள்ளி பிரார்த்தனைக் கூடம் நேர்த்தி, ஒழுங்குகளின் கூடமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. புதுமை வாய்ந்ததாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் இருந்தால் போதும். தவறுகளை ஏற்றுக்கொள்ளும் இடமாகவும் கற்றலையும் பகிரலையும் சொல்லிக் கொடுக்கும் பகுதியாகவும் இருக்கலாம். அந்த இடத்தில் யாரும் மதிப்பிடப்படக் கூடாது. உதாசீனப்படுத்தப்படக் கூடாது. இதன்மூலம் மேடை பயம் போக்கப்படும். 


பள்ளி சீருடைகள்


பள்ளி சீருடைகளின் நிறம், வகை முக்கியமானவை ஆகும். ஒவ்வொரு பள்ளியும் பாரம்பரியமான அல்லது நவீனமான அல்லது பாலின சமத்துவம் கொண்ட சீருடைகளைத் தேர்வு செய்யலாம். உள்ளூர் காலநிலை, பாதுகாப்பு, எளிதில் கிடைக்கும் திறன், குறைந்த செலவு உள்ளிட்டவற்றைக் கருத்தில்கொள்ள வேண்டியது முக்கியம். 


அதே நேரத்தில் மாணவர்கள் தரையில் பாயிலும் ஆசிரியர்கள் நாற்காலிகளிலும் உட்கார்வதும் அத்தகைய படிநிலைகளும் தவிர்க்கப்பட வேண்டும். 


சமத்துவம்


சாதி, பாலினம், மதம், சமூக- பொருளாதார நிலைகள், மாணவர்களின் செயல்திறன் அல்லது எந்த ஒரு காரணியையும் அடிப்படையாகக் கொண்டு சமத்துவமின்மை பாராட்டுவதை ஒருபோதும் ஏற்க முடியாது. 


மும்மொழிக் கொள்கை


தேசிய கல்விக் கொள்கையை அடுத்து, பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவிலும் மும்மொழிக் கொள்கையே பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்பதன் முக்கியத்துவமும் முன் வரைவில் விளக்கப்பட்டுள்ளது. 


கலாச்சாரம்


இந்தியனாக இருப்பதன் முக்கியத்துவத்தை, இந்தியாவின் கடந்தகாலப் பெருமிதங்களையும் அதன் வளமான பன்முகத் தன்மையையும் புரிந்துகொள்வதன் மூலம் அறியலாம். இதற்கு மாணவர்கள் இந்தியாவின் பண்டைய கால, இடைக் கால, நவீன காலத்தின் வரலாற்றை அறியச் செய்ய வேண்டும். 


இவ்வாறு தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவில் கூறப்பட்டுள்ளது.


தேசிய பாடத்திட்ட வடிவமைப்பின் முன் வரைவை முழுமையாகக் காண: https://ncert.nic.in/pdf/ncfse2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும்.