என்சிஇஆர்டி பள்ளி பாடப் புத்தகங்களை உருவாக்கும் குழுவில்  இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, பாடகர் சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


என்சிஇஆர்டி என்று அழைக்கப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், நாடு முழுவதும் மத்திய அரசின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ, கே.வி., ஏகலவ்யா உண்டு உறைவிடப் பள்ளி உள்ளிட்ட அரசுப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் பாடத் திட்டங்களை உருவாக்கும் ஓர் அரசு அமைப்பாகும். 


இந்த அமைப்பின் சார்பில், என்எஸ்டிசி எனப்படும் தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு (National Syllabus and Teaching Learning Material Committee) உருவாக்கப்பட்டது. இந்தக் குழு தேசிய கல்வித் திட்டமிடல் மற்றும் நிர்வாக நிறுவனத்தின் ( National Institute of Educational Planning and Administration) தலைமையின் கீழ் செயல்படும்.


எதற்காக இந்தக் குழு?


பள்ளிகளில் 3 முதல் 12-ம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்களை இந்தக் குழு உருவாக்கும். இந்த குழுவில் இன்ஃபோசிஸ் அறக்கட்டளையின் தலைவர் சுதா மூர்த்தி, பாடகர் சங்கர் மகாதேவன், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும் பொருளாதார நிபுணருமான சஞ்சீவ் சன்யால் உள்ளிட்ட பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் 19 உறுப்பினர்களைக் கொண்டு என்எஸ்டிசி குழு உருவாக்கப்பட்டுள்ளது.


தேசிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்டக் கட்டமைப்புடன் (NCF-SE) சேர்ந்து, பாடத்திட்டத்தை சீரமைக்க என்எஸ்டிசி குழு உதவும். ஏற்கெனவே பாடத்திட்டக் கட்டமைப்பு மத்தியக் கல்வி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், பொதுமக்கள் பார்வைக்கு இன்னும் வெளியிடப்படவில்லை. முன்னதாக இதன் முன் வரைவு ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்டது 


குழு என்ன செய்யும்?


தேசிய பாடத் திட்டம் மற்றும் கற்பித்தல் கற்றல் பொருள் குழு, 3 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளி பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல், கற்றல் பொருட்களை  (textbooks, teaching learning materials) உருவாக்கும் பணியில் ஈடுபடும். இவை சரிபார்க்கப்பட்டு, என்சிஇஆர்டியால் வெளியிடப்பட்டு பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்படும்.


இந்த குழுவில் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் கணிதப் பேராசிரியரான மஞ்சுல் பார்கவ் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல கணிதவியல் நிபுணர் சுஜாதா ராம்துரை, பேட்மிண்டன் வீரர் விமல் குமார், கொள்கை ஆய்வு மையத்தின் தலைவர்  ஸ்ரீனிவாஸ், பாரதிய பாஷா சமிதியின் தலைவர் சாமு கிருஷ்ண சாஸ்திரி ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.


சர்ச்சையில் சிக்கிய பாடத்திட்ட நீக்கம்


ஏற்கெனவே என்சிஇஆர்டி புத்தகங்களில் இருந்து மே மாதத்தில் ஏராளமான பாடங்களும் கருத்துகளும் நீக்கப்பட்டது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பாஜக தலைமையிலான மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியின் காரணமாக இவ்வாறு செய்வதாகக் கூறப்பட்டது. எனினும் இதற்கு என்சிஇஆர்டி மறுப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.