நீட், ஜேஇஇ ஆகிய மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கு மத்திய அரசு சார்பில் இலவச கோச்சிங் வழங்கப்படுவதுடன் பயிற்சித் தேர்வுகளும் அளிக்கப்படுகின்றன. இதில் கலந்துகொள்வது எப்படி என்று பார்க்கலாம்.


நாட்டின் முக்கியமான தேர்வுகளாகக் கருதப்படும் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வு (ஜேஇஇ) ஆகியவற்றுக்கு அரசே சிறப்புப் பயிற்சி அளிக்கிறது. அதேபோல எஸ்எஸ்சி, பேங்க்கிங் ஆகிய தேர்வுகளுக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகம் (NCERT) சார்பில், இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.


வீடியோ வடிவிலும் பாடங்கள்


மேலே குறிப்பிட்ட தேர்வுகளுக்கான பாடத் திட்டங்கள், விண்ணப்பப் பதிவு ஆகியவையும் சதீ தளத்தில் விவரமாக வழங்கப்பட்டு உள்ளது. வீடியோ வடிவிலும் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.


இதற்காக 'Sathee Portal 2024' என்ற பெயரில் சதீ தளம் 2024ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மாணவர்கள் படிப்பதற்கான விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன. நேரலையிலேயே சந்தேகங்களைத் தீர்த்து வைக்கும் அமர்வுகளும் இதில் உண்டு.


பயிற்சி வகுப்புகள் எப்போது?


சதீ பயிற்சி வகுப்புகள் தினந்தோறும் காலை 10 முதல் 6 மணி வரை நடைபெறுகின்றன. எனினும் ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில் இந்த வசதி கிடையாது.


 பயிற்சி பெறுவது எப்படி?


https://sathee.prutor.ai/register/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் ஆகும். இந்தத் தளத்தில் சுமார் 4.5 லட்சம் மாணவர்கள் பதிவு செய்து, பயனடைந்து உள்ளதாகக் கூறப்படுகிறது.


இணைய வசதி குறைவாகவோ, இல்லாமலோ இருக்கும் பகுதிகளில் டிடிஎச் சேனல்களில் காணும் வசதியும் சதீ தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் மாணவர்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கேட்பதற்கான, சாட்பாட் (chatbot) வசதியும் செய்யப்பட்டுள்ளது.


கூடுதல் தகவல்களுக்கு: https://sathee.prutor.ai/


2024-2025 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு மேல்நிலை ப்பள்ளிகளில் 11 மற்றும் 12 - ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளில் நீட், ஜேஇஇ போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ளவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இலவசப் பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.