தமிழ்நாட்டில் இருந்து 4 பேருக்கு இன்று தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்க உள்ளார். 


மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதியை, ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மத்திய, மாநில அரசுகள் நல்லாசிரியர் விருதுகளை வழங்குகின்றன.


கடந்த கால வரலாறு


2020ஆம் ஆண்டு ஆசிரியர்கள் சரஸ்வதி, திலிப் ஆகிய 2 பேர் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றனர். 2021ஆம் ஆண்டு ஆசிரியர்கள் ஆஷா தேவி மற்றும் லலிதா என்னும் இருவர் தேசிய விருது பெற்று இருந்தனர். 2022ஆம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஒரே ஓர் ஆசிரிராக ராமச்சந்திரன் மட்டுமே தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டார். 


இதைத் தொடர்ந்து 2023ஆம் ஆண்டு, 4 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 2 பேர் பள்ளிக் கல்வித்துறையில் இருந்தும் 1 ஆசிரியர் உயர் கல்வித்துறையில் இருந்தும் ஓர் ஆசிரியர் திறன் மேம்பாட்டில் இருந்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 


பள்ளிக்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்:


மதுரை, அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முனைவர் டி.காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் 


தென்காசி, வீரகேரளம்புதூர், கீழப்பாவூர் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் மாலதி


உயர்கல்வித் துறையில் தமிழ்நாட்டில் இருந்து விருது பெறுபவர்:


கோயம்புத்தூர், பி.எஸ்.ஜி பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் எஸ்.பிருந்தா. 


திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்திடமிருந்து விருது பெறும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்:


எஸ்.சித்திரகுமார், உதவி பயிற்சி அலுவலர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), 
நத்தம் ரோடு, குள்ளம்பட்டி, திண்டுக்கல்-624003.


என்ன காரணம்?


இந்த ஆண்டு முதல், தேசிய நல்லாசிரியர் விருது, உயர் கல்வித் துறை மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஆசிரியர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 50 பள்ளி ஆசிரியர்கள், 13 உயர் கல்வி ஆசிரியர்கள், திறன் மேம்பாட்டு அமைச்சகத்தைச் சேர்ந்த 12 ஆசிரியர்கள் ஆகிய 75 பேருக்கு இந்த ஆண்டுக்கான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இதில் தமிழ்நாட்டிச் சேர்ந்த 4 ஆசிரியர்களும் அடக்கம்.


புதுச்சேரியில் இருந்து ஒருவர் கூட இல்லை


தேசிய நல்லாசிரியர் விருதுக்கு புதுமையான கற்பித்தல், ஆராய்ச்சி, சமூக தொடர்பு மற்றும் பணியில் புதுமை ஆகிய காரணிகள் கருத்தில் கொள்ளப்பட்டன. அவற்றை அங்கீகரிக்க, இணையதள முறையில் பரிந்துரைகள் கோரப்பட்டன. ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக புகழ்பெற்ற நபர்களைக் கொண்ட மூன்று தனித்தனி தன்னாட்சி அதிகாரம் பெற்ற தேசிய நடுவர் குழு அமைக்கப்பட்டது.


அவர்கள் மூலம் விருதுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவ்வாறு நாடு முழுவதும் 75 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட நிலையில், புதுச்சேரியில் இருந்து ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை.