அரசுப் பள்ளிகளுக்கு உதவ பொதுமக்களும் அரசும் இணையும் ’நம்ம ஸ்கூல்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். கற்றுக் கொடுத்த பள்ளியை வளர்த்தெடுக்க இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் என்ன? பார்க்கலாம்.
நோக்கம் என்ன?
முன்னாள் மாணவர்கள், உள்ளூர்ச் சமூகம் மற்றும் நிறுவனங்கள் ஆகியவை அரசுடன் இணைந்து செயலாற்றுவதற்கான தளத்தை உருவாக்குவது நம்ம ஸ்கூல் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் என இருதரப்பின் பங்கேற்பையும் பங்களிப்புகளையும் பெற்று அவற்றை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்தி தரமான கல்வியை வழங்குவதற்கான ஒரு தளத்தை உருவாக்க இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதேபோல, முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியையும் உடன்பயின்ற நண்பர்களையும் தங்களுக்குக் கற்றுத் தந்த ஆசிரியர்களை தொடர்புகொள்ளவும் இந்தத் திட்டம் உதவும்.
கல்வியின் தரம் என்பது பள்ளியின் உள்கட்டமைப்பு முதல் ஆரோக்கியம், சுகாதாரம், ஊட்டச்சத்து, கற்பித்தல், விளையாட்டு மற்றும் பண்பாடு, பாடத்திட்டம் சாரா செயல்பாடுகள் என்பது வரை பரந்து விரிந்துள்ளதாகும். நாளுக்கு நாள் நவீனமாகிக் கொண்டே செல்கின்ற, மாறிக்கொண்டே இருக்கின்ற உலகின் சவால்களை எதிர்கொண்டு வெற்றிபெற கல்வி கற்பவர்கள் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு, நம்ம ஸ்கூல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
செயல்பாடுகள் எப்படி?
அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய நிதியின் மூலம் அரசுப் பள்ளிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்யப்படும். அதேபோல சமூக அக்கறை கொண்ட தொழில் நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (சிஎஸ்ஐஆர்) மூலம் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கலாம்.
தத்தெடுப்பதன் மூலம், பள்ளிகளின் சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், நவீன கழிப்பறைகள், சுகாதாரமான குடிநீர் வசதி, தரமான ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.
வெளிப்படைத் தன்மைக்கென தனிக் குழு
’நம்ம ஸ்கூல்’ திட்டத்தில் பெறப்படும் உதவிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வெளிப்படைத் தன்மையையும் நிர்வகிக்க உயர் அலுவலர்களைக் கொண்ட குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கெனத் தனி இணையதளம் உருவாக்கப்பட்டு, பள்ளிகளின் தேவைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்திற்கு வழங்கப்படும் நிதியுதவிகள் அனைத்தும் இணையவழியில் எளிதாக வழங்க வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொடையாளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தபடியே அளித்த நிதி எந்தப் பள்ளியில் எவ்வாறு செலவிடப்பட்டுள்ளது என்ற தகவல்களை அறியும் வண்ணமும் பயனீட்டுச் சான்றிதழை இணைய வழியாகவே பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
எப்படி உதவலாம்?
நிதியாகவோ எழுது, கல்வி பொருட்களாகவோ பங்களிப்பை வழங்கலாம். தேவை உள்ள பள்ளிகளுக்கோ, நீங்கள் படித்த பள்ளிக்கோ உதவலாம். வசதியும் மனமும் இருந்தால், பள்ளியையே முற்றிலுமாகத் தத்தெடுக்கலாம். தன்னார்வலராகவும் உங்கலின் பங்கை ஆற்றலாம்.
ஒவ்வொரு பள்ளி குறித்தும் இணைய தளத்திலேயே மெய்நிகர் சிற்றுலாவும், இந்த சிற்றுலா மூலம் பள்ளிகளின் தேவைகளை நேரில் சென்று பார்த்தது போல அறிந்து கொள்ள இயலும். ’நிதியுதவிக்கு முன்னும்’, நிதியுதவிக்குப் பின்னும்’ என தகவல்களை புகைப்படங்களோடு பெறவும் பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சிகளை காட்சிப்படுத்தவும் இந்த இணையதளத்தில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் முந்தைய, பிந்தைய நிலை குறித்து https://nammaschoolpavilion.tnschools.gov.in/showthenandnow/22 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
இந்த இணையதளத்திலேயே இந்த மாவட்ட அரசுப் பள்ளிக்கு இன்ன உதவி தேவை என்ற வாக்கியங்கள் ஸ்க்ரால் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இருந்தும் நன்கொடையாளர்கள் தேவையான பள்ளியைத் தேர்ந்தெடுத்து உதவலாம்.
நம்ம ஸ்கூல் இணையதளம் : https://nammaschool.tnschools.gov.in/
கூடுதல் விவரங்களுக்கு
தொலைபேசி எண்கள் - 9144 28278068 / +9144 28241504
மின்னஞ்சல்: nammaschoolcsr@gmail.com