பிசினஸ் முதல் பயோடெக்னாலஜி வரை: மீன்வளப் பல்கலைக்கழகத்தில் கொட்டிக்கிடக்கும் வித்தியாசமான படிப்புகள்!
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் 2026-27 கல்வியாண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் முனைவர் பெலிக்ஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம்: தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில் (TNJFU) 2026-27-ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மீன்வளப் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் இணையவழி விண்ணப்பப் பதிவை பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் நா. பெலிக்ஸ் கடந்த 15.05.2026 அன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்துள்ளார்.
நாகப்பட்டினத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இப்பல்கலைக்கழகம், தமிழகத்தில் மீன்வளத் தொழிற்கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகளை மேம்படுத்தி மீன் உற்பத்தியை அதிகரிப்பதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வழங்கப்படும் படிப்புகள் மற்றும் இடங்களின் விவரம்
தற்போது இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 10 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் ஒரு தனியார் இணைப்புச் கல்லூரி செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 5 மீன்வளம் சார்ந்த நான்கு ஆண்டு பட்டப்படிப்புகள் மற்றும் 3 தொழிற்சார் பட்டப்படிப்புகள் என மொத்தம் 8 வகையான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
* பி.எப்.எஸ்.சி (B.F.Sc.): தூத்துக்குடி, பொன்னேரி மற்றும் தலைஞாயிறு ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது.
* பி.டெக் (B.Tech): நாகப்பட்டினத்தில் உள்ள மீன்வளப் பொறியியல் கல்லூரியில் இளநிலை மீன்வளத் தொழில்நுட்பக் கல்வி வழங்கப்படுகிறது.
* உயிர் தொழில்நுட்பம் மற்றும் வணிக மேலாண்மை: வாணியன்சாவடி OMR வளாகத்தில் இளநிலை உயிர் தொழில்நுட்பவியல் மற்றும் இளநிலை வணிக நிர்வாகவியல் (மீன்வள வணிக மேலாண்மை) படிப்புகள் உள்ளன.
* உணவுத் தொழில்நுட்பம்: சென்னை மாதவரம் வளாகத்தில் இளநிலை உணவுத் தொழில்நுட்பவியல் பயிற்றுவிக்கப்படுகிறது.
* தொழிற்சார் பட்டப்படிப்புகள் (B.Voc): UGC அங்கீகாரம் பெற்ற மீன்பதன நுட்பவியல் (மாதவரம்), மீன்பிடி நுட்பவியல் (தூத்துக்குடி) மற்றும் நீர்வாழ் உயிரினவளர்ப்பு (முட்டுக்காடு) ஆகிய மூன்று படிப்புகள் வழங்கப்படுகின்றன.
நடப்பு கல்வியாண்டில் உறுப்புக் கல்லூரிகள் மூலம் 417 மாணவர்களும், தனியார் இணைப்புச் கல்லூரி (சிறுபான்மையினர்) மூலம் 30 மாணவர்களும் சேர்க்கப்பட உள்ளனர்.
இடஒதுக்கீடு மற்றும் சிறப்புப் பிரிவினர்
அரசு வழிகாட்டுதலின்படி பல்வேறு பிரிவுகளுக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
* ஐசிஏஆர் (ICAR) ஒதுக்கீடு: 18 இடங்கள்.
* அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
* விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகளுக்கு தலா 4 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒதுக்கீடும் உண்டு.
* அந்தமான் நிக்கோபார் வாசிகள் (7 இடங்கள்), வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (14 இடங்கள்), மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு (8 இடங்கள்) எனப் பல பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
மீனவர் சமூகத்திற்கான சிறப்பம்சங்கள்
மீனவர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்குச் சிறப்புச் சலுகையாக 5% உள்ஒதுக்கீடு (26 இடங்கள்) வழங்கப்படுகிறது. மேலும், மீனவ குழந்தைகளின் நலன் கருதி பி.எப்.எஸ்.சி படிப்பிற்கு 6 இடங்களும், பி.டெக் படிப்பிற்கு 2 இடங்களும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன. இப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், விடுதி மற்றும் உணவுக் கட்டணம் முழுவதையும் தமிழ்நாடு மீனவர் நல வாரியம் ஏற்கும் என்று துணைவேந்தர் தெரிவித்தார். இந்த அரிய வாய்ப்பை மீனவ மாணவர்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் காலக்கெடு
மாணவர்கள் www.admission.tnjfu.ac.in என்ற இணையதளத்தின் வாயிலாக 15.05.2026 முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: SC/ST பிரிவினருக்கு ₹250/- மற்றும் இதர பிரிவினருக்கு ₹500/-.
கடைசி நாள்: விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்ற 14.06.2026 அன்று மாலை 6.00 மணி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக ஏற்கப்படாது. சிறப்புப் பிரிவின் கீழ் வருவோர் அதற்கான சான்றிதழ்களை இணையதளத்திலேயே பதிவேற்ற வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு குறித்த தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு அலுவலக நேரங்களில் 04365-211090 அல்லது 81221 44031 என்ற எண்களிலோ, admissionug@tnfu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்






















