நான் முதல்வன் திட்டத்தின் பெயரை, எக்ஸ் பக்கத்தில் மாற்றி முந்தைய பதிவுகள் அனைத்தையும் நீக்கிவிட்டதாக தவெக அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Continues below advertisement

முன்னாள் முதல்வர் ஸ்டாலினால், முந்தைய திமுக அரசில் தொடங்கப்பட்டது நான் முதல்வன் திட்டம். இது தமிழ்நாட்டு இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் ஒரு தொலைநோக்குத் திட்டமாகும். இது பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான நவீன திறன் பயிற்சிகள், போட்டித் தேர்வு வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

Continues below advertisement

எதற்கு நான் முதல்வன் திட்டம்?

கோடிங், டேட்டா சைன்ஸ், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள் வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்படுகின்றன. அதேபோல டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி, ஆர்ஆர்பி உள்ளிட்ட அனைத்து வகையான அரசு போட்டித் தேர்வுகளுக்கும் சிறப்புப் பயிற்சிகள் நான் முதல்வன் திட்டம் மூலம் வழங்கப்பட்டு வந்தன. இதில் உண்டு, உறைவிடப் பயிற்சியோடு முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகுதி வாய்ந்த மாணவர்களுக்கு உதவித் தொகையும் மாதாமாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளிப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதில் துறைசார் நிபுணர்கள் வழங்கும் பயிற்சி அமர்வுகள், பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை வழங்கி வருகின்றனர்.

நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம்

இந்த நிலையில் நான் முதல்வன் திட்டம் தற்போது 'திறன் தமிழ்நாடு' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திட்டத்தின் எக்ஸ் பக்க கணக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதேபோல புரொபைல் புகைப்படமும் மாற்றப்பட்டுள்ளது.

நான் முதல்வன் திட்ட பயனாளிகள், சாதனையாளர்களின் பதிவுகள், வீடியோக்கள் அனைத்தும் நீக்கப்பட்டு மே 15 முதலான பதிவுகள் மட்டுமே அதில் இடம் பெற்றுள்ளன.

 தவெக மாற்று சக்தியா?

ஆட்சி மாற்றத்தின்போது முந்தைய அரசுகளின் திட்டங்கள் பெயர் மாற்றப்படுவது வழக்கம்தான் என்றாலும் மாற்று சக்தி என்று கூறிக்கொள்ளும் தவெக அதைச் செய்யலாமா என்று கல்வியாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல பல்வேறு வகையான பயனாளிகளின் பேச்சுகள், சாதனைகள் அடங்கிய வீடியோக்கள் நீக்கப்பட்டது ஏன் என்றும் கேள்வி எழுந்துள்ளது.