இளம் அறிவியல் ஆய்வாளர்களுக்கான ஆதரவு திட்டத்துக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசித் தேதி ஆகும்.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் வின்சென்ட் கூறி இருப்பதாவது:
’’கல்லூரி ஆய்வு மாணவர்களுக்கான அறிவியல் ஆய்வு நிதியுதவி பற்றாக்குறையை களையும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை அறிவியல் தொழில்நுட்ப மாநிலம் மன்றம் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தின்கீழ், கல்லூரிகளில் படிக்கும் முழு நேர பிஎச்டி ஆய்வு மாணவர்களை ஊக்குவிப்பதற்காக அவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம்தோறும் ரூ.10 ஆயிரம் ஆய்வு உதவித் தொகையும், இதர செலவினங்களுக்காக ஆண்டுக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இதன்மூலம் கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுவர்.
என்ன தகுதி?
* இத்திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற கல்லூரிகளில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
*மாநிலக் கல்லூரிகளில் படிப்பவராக இருக்க வேண்டும்.
*ஆய்வு மாணவர்கள் அங்கீகரிக்கப்பட்ட ஆய்விதழ்களில் குறைந்தபட்சம் 2 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்திருக்க வேண்டும்.
*இத்திட்டத்தின் கீழ் 10 ஆய்வு மாணவர்களுக்கு நிதி உதவி செய்யப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் இரண்டு நகல்களை, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலருக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பர் 30-ம் தேதி’’.
இவ்வாறு தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர் தெரிவித்துள்ளார்.
கூடுதல் தகவல்களுக்கு: www.tanscst.tn.gov.in