நடிகர் ரஜினியின் நெருங்கிய நண்பரும் தெலுங்கு நடிகருமான மோகன் பாபுவின் பல்கலைக்கழகத்தின் உரிமத்தை ரத்து செய்ய மாநில உயர்கல்வி ஆணையம் பரிந்துரை செய்ததுடன், ரூ.15 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

Continues below advertisement

திருப்பதியில் பிரபல நடிகர் மோகன் பாபுவுக்கு சொந்தமாக ஸ்ரீ வித்யாநிகேதன் கல்வி நிறுவனம் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகிறது. 2022ஆம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம், மோகன் பாபு பல்கலைக்கழகம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்துக்கு எதிராக, மாநில உயர்கல்வி ஆணையம் தற்போது சாட்டையைச் சுழற்றி உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மாணவர்களிடம் இருந்து சுமார் ரூ.26 கோடி கூடுதல் கட்டணம் வசூலித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பல்கலைக்கழகத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு மாநில அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்துள்ளது. அத்துடன், ரூ.15 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதிக கட்டண வசூல்

இந்த விவகாரம் குறித்து பல மாதங்களாக விசாரணைகள் நடைபெற்று வந்தன. பல்கலைக்கழகம் நிர்ணயிக்கப்பட்ட கட்டண வரம்புகளை மீறி, மாணவர்களிடமிருந்து அதிகப்படியான கட்டணங்களை வசூலித்ததாக புகார்கள் எழுந்தன.

விசாரணையின் முடிவில், இந்தப் புகார்கள் அனைத்தும் உண்மை என உறுதி செய்யப்பட்டன. குறிப்பாக, கடந்த 2021-2022, 2022-2023 மற்றும் 2023-2024 ஆகிய கல்வி ஆண்டுகளில், பல்கலைக்கழகம் தொடர்ந்து அதிக கட்டணங்களை வசூலித்து வந்துள்ளது.

கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

மாநில உயர்கல்வி ஆணையம், கல்விக் கட்டணங்களை முறைப்படுத்துவதற்கும், மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த பரிந்துரையின் மூலம், கல்வி நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்ற செய்தியை ஆணையம் உணர்த்தியுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கையால், எதிர்காலத்தில் கல்வி நிறுவனங்கள் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மையுடனும், பொறுப்புடனும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.