சிவகங்கை அருகே கீழடியில் அரசுப் பள்ளி ஒன்றில் தமிழ் வழிக் கல்வியில் பள்ளிப் படிப்பை முடித்து, ஐஐடி சென்னையில் பி.டெக். படிப்பில் சேர உள்ள முகமது பாட்ஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

Continues below advertisement


அரசுப் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி


சிவங்கை அருகே கீழடியைச் சேர்ந்த பார்வை மாற்றுத் திறனாளி மாணவர் முகமது பாட்ஷா. இவரின் தந்தை தையல்காரராகப் பணிபுரிந்து வருகிறார். முகமது பாட்ஷா அங்கேயே உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பை தமிழ் வழிக் கல்வியில் படித்தார். 


தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ஐஐடியில் சேர்ந்து படிக்க பயிற்சி பெற்றார். இதன் மூலம் ஐஐடிக்களில் சேர நடத்தப்படும் ஜேஇஇ எனப்படும் கூட்டு நுழைவுத் தேர்வை எழுதினர். இதில், அட்வான்ஸ்ட் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ், அகில இந்திய அளவிலான தரவரிசைப் பட்டியலில் 88ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 


முழு கல்வி செலவையும் ஏற்கும் தமிழக அரசு


ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சி பெற்று, ஐஐடி சென்னையில் பி.டெக். படிப்பில் சேர உள்ளார். குறிப்பாக metallurgical and materials engineering பிரிவை முகமது பாட்ஷா தேர்வு செய்துள்ளார். இவருக்கான முழு கல்வி செலவையும் தமிழ்நாடு அரசே ஏற்பதாக அறிவித்துள்ளது. 


கீழடியில் இருந்து ஐஐடி சென்னையில் படிக்கத் தேர்வான முகமது பாட்ஷாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. கல்வி ஒன்றே யாராலும் அழிக்க முடியாத செல்வம் என்பதை முகமது பாட்ஷா உணர்ந்து செயல்பட்டதாலேயே, சாதித்துள்ளார் என்று சமூக வலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.


முதல் பழங்குடி மாணவி ராஜேஸ்வரி


முன்னதாக, சேலம், கல்வராயன் மலை பகுதியைச் சேர்ந்த பழங்குடி மாணவி ராஜேஸ்வரி, ஜேஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தார். கடந்த ஆண்டு இவரின் தந்தை புற்றுநோயால் உயிரிழந்த நிலையிலும், விடாப்பிடியாகப் படித்து, சாதித்தது பாராட்டுகளை அள்ளியது நினைவுகூரத் தக்கது.