மத்தியக் கல்வி அமைச்சகம் நடத்திய ஆய்வில் பள்ளிகளுக்கு 48% மாணவர்கள் நடந்தே செல்வதாகவும், கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 


மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் 2021ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி நாடு முழுவதும் என்ஏஎஸ் எனப்படும் National Achievement Survey ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில் 3, 5, 8 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் கலந்துகொண்டனர். 720 மாவட்டங்களில் இருந்து கிராமம் மற்றும் நகர்ப்புற மாணவர்கள் 34 லட்சம் பேர் இந்த ஆய்வில் கலந்துகொண்டனர். முன்னதாக 2017ஆம் ஆண்டு இந்த என்ஏஎஸ் ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. 


22 மொழிகளில் ஆய்வு


ஆய்வுக்காக மாணவர் கேள்வித்தாள், ஆசிரியர் கேள்வித்தாள் மற்றும் பள்ளி கேள்வித்தாள் ஆகியவை உருவாக்கப்பட்டு, 22 பிராந்திய மொழிகளில் என்சிஇஆர்டியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டன. இந்த ஆய்வு சிபிஎஸ்இயால் மேற்பார்வை செய்யப்பட்டது. 


அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் இந்த ஆய்வு நடைபெற்றது. 3 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. 


8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மொழிப்பாடம், ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வுகள் நடைபெற்றன. 


ஆய்வு சொல்வது என்ன?


இந்த ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:


''* நாடு முழுவதும் குறைந்தபட்சம் 48 சதவீத மாணவர்கள் நடந்துதான் பள்ளிக்குச் செல்கின்றனர். 


* 18 சதவீதம் பேர் மிதிவண்டி மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர்.


* 9 சதவீத மாணவர்கள் பள்ளி போக்குவரத்தைப் பயன்படுத்துகின்றனர். 


3 சதவீத மாணவர்களுக்கு 4 சக்கர வாகனங்கள் 


* 8 சதவீத மாணவர்கள் சொந்த இரு சக்கர வாகனங்கள் மூலம் பள்ளிக்குச் செல்கின்றனர். வெறும் 3 சதவீத மாணவர்கள் மட்டுமே கார் உள்ளிட்ட சொந்த நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துகின்றனர். 


* 87 சதவீதப் பள்ளிகளில், கற்றலில் குழந்தைகளுக்குப் பெற்றோர்கள்  எவ்வாறு வழிகாட்டலை வழங்கலாம் என்பதற்கான வழிகாட்டுதலை வழங்குகின்றன.


* எனினும் கற்றலில் பெற்றோரின் ஆதரவு இல்லாமல் மாணவர்கள் இருப்பதாக 25 சதவீதம் பள்ளிகள் தெரிவித்துள்ளன.


* 51 சதவீத மாணவர்களின் வீட்டில் மட்டுமே பெற்றோருக்கான புத்தகங்கள் அல்லது இதழ்கள் இருக்கின்றன. 


* 89 சதவீத மாணவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் பள்ளிகளில் கற்பிக்கப்பட்ட பாடங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்''.  


இவ்வாறு ஆய்வு முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண