மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1ஆம் தேதி) தனது 70ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். இவரது பிறந்த நாளை திமுக தொண்டர்கள் தமிழ்நாடு முழுவதும் இனிப்பு வழங்கி, கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். முதலமைச்சருக்கு நேற்று முதலே வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.


இந்த நிலையில் மாணவர்களின் நலனுக்காக அயராது பாடுபட்டு வரும் ஆசிரியர் சமூகத்தை சிறப்பிக்கும் விதமாகவும் ஆசிரியர்களின் நலனைக் காக்கவும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து இன்று முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு:


''மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்காக அனைத்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் கைக்கணினி (Tablet) வழங்கப்படும்.


மாணவர் வாழ்க்கை ஏற்றம் காண அயராது உழைக்கும் ஆசிரியர்களின் உடல்நலம் காக்க அனைத்து ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.


உயர் கல்வி பயிலும் ஆசிரியர்களின் குழந்தைகளுக்காக தற்போது ஆசிரியர் நல நிதியிலிருந்து வழங்கப்பட்டு வரும் கல்விச் செலவு (tuition fee) ரூ.50,000/- வரை உயர்த்தி வழங்கப்படும்.


அரசின் நலத்திட்ட உதவிகளை மாணவர்களிடையே சிறப்பாக கொண்டு சேர்க்கும் ஆசிரியர்கள், வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர். இந்தத் திட்டங்கள் அனைத்தும் சுமார் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்''.


இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, சென்னையில்‌ உள்ள பேராசிரியர்‌ அன்பழகன்‌ கல்வி வளாகத்தில்‌ இருக்கும்‌ டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌. நூற்றாண்டு விழா கட்டடத்தில்‌ நவீன முறையில்‌ அமைக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப்‌ புலம்‌ (Assessment cell), முன்னோட்டக்‌ காட்சி அரங்கம்‌ (Preview theatre), விரிவுபடுத்தப்பட்ட 14417 உதவி எண்ணுக்கான அழைப்பு மையம்‌ ஆகியவற்றை பள்ளிக்‌ கல்வித்‌துறை நிர்மாணித்திருக்கிறது.


இவற்றை பயன்பாட்டுக்குக்‌ கொண்டு வரும்‌ வகையில்‌, பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி தலைமையில்‌, இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ இவற்றைத் திறந்து வைத்தார்‌.


பள்ளிக்‌ கல்வி தொடர்பான தமிழ்நாடு அரசின்‌ திட்டங்களைச் சிறப்பான முறையில்‌ செயல்படுத்த காரணமாக உள்ள ஆசிரியர்களுக்கும்‌ மாணவர்களுக்கும்‌ தன்‌ பிறந்த நாளன்று தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ வெளியிடும்‌ செய்தி காணொலியாக இங்குள்ள முன்னோட்டக்‌ காட்சி அரங்கத்தில்‌ திரையிடப்பட்டது.


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.