மும்மொழிக் கொள்கை விவகாரத்தில், மீண்டும் ஒரு மொழிப் போரை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று கூறியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள் என்று ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.


மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம்


புதிய கல்விக் கொள்கையை அடிப்படையாக வைத்து அச்சுறுத்தும் வகையில் நடந்துகொள்ளக் கூடாது. தமிழக அரசின் பார்வையில் குறைபாடு உள்ளது. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, கல்வியை அரசியல் ஆக்கக்கூடாது என்று மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளார்.


இந்தக் கடிதத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதிலளித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:


 மீண்டும் ஒரு மொழிப் போரா?


’’3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு உள்ளிட்டவற்றால் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.  மீண்டும் ஒரு மொழிப் போரைக் கொண்டுவரக் கூடாது என்ற விதத்தில் கண்டனத்தைத் தெரிவித்தோம். தமிழின் பெருமையை நாங்களும் பிரதமரும் முன்னெடுத்திருக்கிறோம் என்று மத்தியக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


மாணவர்களின் நலனை நீங்கள் விரும்பினால், நிபந்தனை விதிக்கக்கூடாது. நாங்க சொல்வதை நீங்க கேளுங்க. அரசுப் பள்ளிகளில் படித்து, இருமொழிக் கொள்கையை பின்பற்றும் எங்களின் மாணவர்கள் தங்களை நிரூபித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள். மாநிலங்களைக் கலந்து ஆலோசிக்காமல்தான் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள முக்கியக் கட்சிகள் அனைத்தும் இரு மொழிக் கொள்கையையே ஆதரிக்கின்றன. 


தூண்டிலில் மீன் எதுவும் சிக்காதா?


தூண்டிலில் மீன் எதுவும் சிக்காதா என்பதாகத்தான் உங்களின் கடிதம் இருக்கிறது.  புதிய கல்விக் கொள்கை இடைநிற்றலை அதிகரிக்கும். மாணவர்களை அழுத்தத்துக்கு ஆட்படுத்தி ஓட விடாமல் செய்துவிடும் என்பதால் எதிர்க்கிறோம்’’.


இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.