சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டார்வின் அறிவியல் மன்றம் நடத்திய "அறிவியலைக் கொண்டாடுவோம்" என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு விழா பேருரை ஆற்றினார். அப்போது அவர் பேசியது, மாணவர்களின் யோசனைகளை அறிவியல் படைப்புகளாக மாற்ற அரசு சார்பில் புதிய தளத்தை ஏற்படுத்தி தரப்படும். மாணவர்களின் யோசனைகள் வீட்டிலேயே முடிந்துவிடாமல், அதனை செயல்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பகுத்தறிவோடு சிந்திப்பது விஞ்ஞானிகளுக்கு இணையானதுதான் என்றும் பேசினார்.
மேலும், வானவில் மன்றம் மூலம் 710 கருத்தாளர்கள் மூலம் ஒவ்வொரு பள்ளிக்கும் சென்று அறிவியல், கணிதம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. கிராமப்புற மாணவர்களுக்கும் அறிவியல் சென்றடைய மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைவருக்கும் அறிவியல் மனப்பான்மை கொண்டுவர வேண்டும் என அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளது. அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆசிரியரின் கடமை என்றும் கூறினார். சந்திராயன் போன்ற விண்வெளி திட்டங்களில் அரசு பள்ளியில் படித்தவர்களின் பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இஸ்ரோ சென்ற ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து தனது அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். கண்டுபிடிப்புகளை உருவாக்குவது மட்டுமில்லாமல் அதற்கான காப்புரிமை பெறுவதும் அவசியம். எப்படி காப்புரிமை பெற வேண்டும் என்பதை ஆசிரியர்கள் சொல்லி தர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அறிவியல் அறிஞர் டில்லி பாபு மற்றும் சேலம் மாவட்ட பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.