பிஹாரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண் நிது குமாரி, கைக் குழந்தை, வீட்டு வேலைகள், முதுகலைத் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆகியவற்றுக்கு இடையில், தன்னுடைய முதல் முயற்சியிலேயே யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்.
பிஹாரின் மதெபூரா மாவட்டத்தில் உள்ள தொலைதூர கிராமம் ராம்நகர் மகேஷ். இவர் உதவிப் பேராசிரியர் பணிக்கும் பிஎச்டி படிப்பில் சேர்வதற்கும் நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வு, ஜூன் மாத அமர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
76.91 பர்சண்டைல் பெற்ற நிது குமாரி
24 வயதான இவர் தன்னுடைய கைக்குழந்தை கவனிப்பு, வீட்டு வேலைகள், பராமரிப்பு, முதுகலைத் தேர்வுக்கான தயாரிப்பு ஆகியவற்றை கவனித்துக் கொண்டார். இவற்றுக்கு நடுவில் நிது குமாரி, இந்தி பாடத்தில் 76.91 பர்சண்டைலைப் பெற்றுள்ளார். இவர் உதவிப் பேராசிரியர், இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை மற்றும் பிஎச்.டி. படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளார்.
இவர் எப்படி படித்தார்?
தினந்தோறும் காலை 7 மணிக்குள்ளாகவே வீட்டு வேலைகளை முடித்துவிடுவேன். 9 மணி வரை படிப்பேன். பிற வேலைகள், மதிய உணவுக்குப் பிறகு 1 மணி முதல் 4 மணி வரை மீண்டும் படிப்பேன். மீண்டும் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, குழந்தையை உறங்க வைத்துவிட்டு, 8 மணி முதல் 10 மணி வரை மீண்டும் படிப்பேன். இதன்மூலம் சராசரியாக தினந்தோறும் 6 முதல் 7 மணி வரை படிக்க முடிந்தது.
குறிப்பிட்டு எந்த புத்தகத்தையும் தனியாகப் படிக்கவில்லை, ஆசிரியர் கொடுத்த நோட்ஸை வைத்து, நானே தயாரித்துப் படிப்பேன். அதில் இருந்து சுருக்கமாக தகவல்களை எழுதி வைத்துக்கொள்வேன். அதை ரெகுலராக திரும்பத் திரும்பப் படிப்பேன்.
போட்டித் தேர்வுகளை எழுத விரும்பும் தேர்வர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறார்?
முதலில் உங்களை நீங்களே நம்புங்கள். தேர்வில் தேர்ச்சி பெறுவீர்கள் என்று நம்பிக்கை வையுங்கள். வெவ்வேறு புத்தகங்கள், நூல்கள் என மாற்றி மாற்றிப் பின்பற்றாதீர்கள். ஒரு நல்ல ஆசிரியர் அல்லது வழிகாட்டியைத் தேர்வு செய்து, பின்பற்றுங்கள். கடந்த காலத்தில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கான வினாத் தாள்களைத் தீர்வு செய்யுங்கள். பாடத்திட்டத்தை கூர்ந்து உள்வாங்கிக்கொள்வதை உறுதி செய்யுங்கள், வெற்றி உங்கள் வசமாகும் என்கிறார் நிது குமாரி.
ஜூன் மாத அமர்வுக்கான யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.