2014 முதல், கடந்த 10 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளும் மருத்துவ இடங்களும் கணிசமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் இதுதொடர்பான புள்ளிவிவரம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


2014ஆம் ஆண்டில் மொத்தம் 387 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்போது 780 கல்லூரிகள் உள்ளன. அதேபோல அப்போது, அதாவது 2014-ல் நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 51,348 இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில், 1,18,137 மருத்துவ இடங்கள் தற்போது உள்ளன.


அந்தமான் & நிக்கோபார் தீவுகள், அருணாச்சலப் பிரதேசம், தாத்ரா & நகர் ஹவேலி, மிசோரம், நாகாலாந்து மற்றும் தெலுங்கானா போன்ற சில மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2013-14 கல்வியாண்டில் மருத்துவக் கல்லூரிகள் எதுவுமே இல்லை. இந்த மாநிலங்கள் அனைத்துவே முதல் மருத்துவக் கல்லூரியைப் பெற்றுள்ளன. அதே நேரத்தில் தெலங்கானாவில் தற்போது வரை 65 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.


கர்நாடகாவில் 2014இல் 46 ஆக இருந்த மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, 2024 இல் 73 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, , உத்தரப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30 இல் இருந்து 86 ஆக உயர்ந்துள்ளது.


அதேபோல, கோவா மற்றும் சண்டிகர் மாநிலங்களில் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்றாலும், மருத்துவ இடங்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளது.